வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (24/01/2018)

கடைசி தொடர்பு:19:13 (24/01/2018)

லாலுக்கு இடிமேல் இடி... மேலும் 5 ஆண்டு சிறை

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான மற்றொரு வழக்கில்  3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று ராஞ்சி பிஸ்ரா முன்டா சிறையில் அடைபட்டு கிடக்கும் லாலுவுக்கு இது பேரிடியாக அமைந்தது. சாய்பாஷா கருவூலத்தில் இருந்து ரூ.37.67 கோடி எடுத்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் இன்று (24-ம்தேதி) மேலும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். பீகார் முன்னாள் முதல்வர் ஜகநாத் மிஸ்ராவும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ரூ.970 கோடி மாட்டுத்தீவன ஊழலில் மொத்தம் 5 வழக்குகள் லாலு மீது தொடரப்பட்டுள்ளன. முதல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று ஜாமீனில் அவர் வெளிவந்தார். தியோகர் கருவூலத்தில் இருந்து 98.27 லட்சம் வரை கையாடல் செய்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதத்தில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். தும்கா கருவூலத்தில் இருந்து  ரூ.3.97 கோடி, தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி ஊழல் செய்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தீர்ப்பு குறித்து லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், '' பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் என்  தந்தையை சிறையிலேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளன. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் அதே எண்ணத்துடன்தான் செயல்பட்டு வருகிறார். உயர் நீதிமன்றத்தில், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் கூட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க