”எம்.ஜி.ஆரைத் தூக்கிடலாமா?” - லக லக லக லக... லதா! பகுதி-4

‘‘பதினைந்து வயதில் சினிமாவில் நடிப்பதற்கான பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர், ‘அசோகன் ஒரு படம் எடுக்கிறார் அதில் நீயும் ஒரு ஹீரோயின்’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி. முதலில் ஒப்பந்தமானது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு என்றாலும் அதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே இன்னொரு படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. 

எம்.ஜி.ஆர்

எனக்கு சோப்ரா மாஸ்டர், கோபாலகிருஷ்ணன் மாஸ்டர், புலியூர் சரோஜா மற்றும் ரகு மாஸ்டர் எனப் பலரும் சினிமா டான்ஸ் பயிற்சி அளித்திருந்தனர். அது தவிர, நான் பரதமும் கதக்கும் முறையாகப் பயின்றேன். இந்நிலையில் எனக்கு அசோகன் தயாரித்த ‘நேற்று இன்று நாளை’ படத்தில் ஒரு இசை நாடகத்தில் நடிப்பதற்கான முதல் காட்சி படமாக்கப்பட இருந்தது. 

சத்யா ஸ்டுடியோவில் முதல் நாள் முதல் காட்சி. மேக்கப்புடன் தயாராக இருந்தேன். அன்றுதான் அசோகனின் அமல்ராஜ் பிக்சர்சின் நேற்று இன்று நாளை படப்பிடிப்பு தொடக்கவிழா. எம் ஜி ஆர் பொதுவாக அவரது படத் தொடக்க விழா அன்று ஒரு பாடல் காட்சியுடன் தான் ஆரம்பிப்பார். இது அவரிடம் இருந்த ஒரு பழக்கம். அன்று அவரைச் சுற்றி ஏராளமானோர் இருந்தனர். அவர் அதிமுக கட்சி ஆரம்பித்த பிறகு அவரைப் பார்க்க எந்நேரமும் சத்யா ஸ்டுடியோவுக்கு ரசிகர்களும் கட்சிக்காரர்களும் வந்தவண்ணம் இருந்தனர். 

முதல் ஷாட். நான் ஒரு படிக்கட்டில் இறங்கி வர வேண்டும், அப்போது ரோமியோ என்ற வரிக்கு வாயசைத்துப் பாடியபடி வர வேண்டும். ‘டேக்’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் சொன்னதும் லதா படியிலிருந்து இறங்கி வந்தேன். அவர் கீழே வந்ததும்

இயக்குநர், ‘லதா  என்னம்மா கிழே தேடிட்டு வந்தீங்க’ என்றார். 

நான் படிகளைப் பார்த்துக்கொண்டு நடந்ததைத்தான் இயக்குநர் அப்படிச் சொன்னார். எனக்குச் சோகமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் தன் கட்சிக்கார்களிடம் பேசிக்கொண்டிருந்த போதும் இந்தச் சம்பவத்தை கவனித்தார்.

எம்.ஜி.ஆர், லதா

ஸ்டுடியோ சூழ்நிலையும் இயக்குநரின் பேச்சும் எனக்குச் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டார். லதாவிடம் ‘என்னம்மா பயமா இருக்குதா’ என்றார் ‘ஆமாம்’ என்றேன். எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆர், ‘ஹீரோவை மாத்திடலாமா?’ என்றார். எனக்கு குபுக்கென்று சிரிப்புவந்துவிட்டது. எம்.ஜி.ஆர் தான் ஹீரோ’’ என எம்.ஜி.ஆரின் கலகலப்பான இயல்பை விவரிக்கிறார் லதா. 

லதா ரோமியோ என்று அழைத்தபடி படிக்கட்டில் இறங்கி வரவும் எம்.ஜி.ஆர் ஜூலியட் என்று அவரை வரவேற்று அணைத்துக்கொண்ட காட்சி ஒரு மேடை நாடகத்தின் முதல் காட்சி ஆகும். இந்த இசை நாடகம் படத்தில் எம்.ஜி.ஆர் தான் வாழும் சேரியில் மக்களுக்காக சில  நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கில் நிதி திரட்ட நடத்தப்பட்டது. ஐயாயிரம் ரூபாய்க்கு டிக்கட் விற்கப்பட்டதாகப் படத்தில் எம்.ஜி.ஆர் மஞ்சுளாவிடம் சொல்வார்.

நேற்று இன்று நாளை படத்தில் லதா கதை ஒரு தனி கிளைக்கதையாக சேர்க்கப்பட்டிருக்கும். அவர் ஒரு திரைப்பட நடிகை. அவர் அப்பா கொலைகாரன்.. அம்மா பேராசைக்காரி. ஆனால் குப்பையில் கிடந்த குண்டுமணியாக [ எம்.ஜி.ஆர் சொல்லும் வசனம்] லதா மட்டும் அன்பும் இரக்கமும் கொண்ட பெண்ணாக இருப்பார். பொதுநலத்தொண்டனான எம்.ஜி.ஆரை ஒருதலையாகக் காதலிப்பார். பின் எம்.ஜி.ஆர் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பது தெரிந்ததும் கன்னியாஸ்திரியாகப் போய்விடுவார். அவர் பல சிறுவர்கள் பின்தொடர கன்னியாஸ்திரி உடையில் நடந்து செல்வார். கிறிஸ்தவ மடத்தில் குழந்தைகளுக்கான கல்வித்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பது நமக்குப் புரியும். 

எம் ஜி ஆர்

இவ்வாறாக எம்.ஜி.ஆர் தன் கொள்கைகளை திரையிலும் நிஜத்திலும் ஒன்று போலவே பின்பற்றினார். நேற்று இன்று நாளை படத்தை போலவே லதாவை கொண்டு நாட்டிய நாடகம் நடத்தி தன் கட்சிக்காக நிதி திரட்டினார். பின்னர் மற்றவர்களைக் கொண்டு நாடகம் நடத்தி தன் அரசுக்காகவும் நிதி திரட்டினார். உலகத் தமிழ் மாநாட்டில் பல திரைக்கலைஞர்கள் பங்கேற்கும்படி செய்தார். மக்களின் ஆதரவால் பேரும் புகழும் வருமானமும் பெறும் கலைஞர்கள் மக்களுக்குத் தொண்டு செய்ய கடமைப்பட்டுள்ளனர் என்பது எம்.ஜி.ஆரின் உறுதியான நம்பிக்கை ஆகும். எனவேதான் மக்கள்நலப் பணிகளில் ஈடுபடுவது போல மற்ற கலைஞர்களும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்று அவர் கருதினார். அதற்கான வாய்ப்புகளை அவர் தனது ஆட்சியில் ஏற்படுத்திக் கொடுத்தார்.

நேற்று இன்று நாளை படத்தில் லதாவின் கதாபாத்திரம் மூலமாக தனிமனித வாழ்க்கை பிரச்னைக்கும் நாட்டின் நிதிப் பிரச்னைக்கும் தீர்வுகளைக் காட்டுகிறார். லதா என்ற கதாபாத்திரத்தின் உதவியால் அவர் இந்த இரண்டு விஷயங்களை எடுத்துரைக்கிறார். ஒன்று, பெண்கள் திருமணம் செய்து கொண்டு தன் பிள்ளைகளை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்துகொண்டு கல்விக்கூடத்திலோ மருத்துவமனையிலோ மற்ற குழந்தைகளுக்கும் மக்களுக்கும் தொண்டாற்றும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது கருத்து, எல்லாவற்றிற்கும் மாநில மத்திய அரசுகளையே நம்பிக்கொண்டும் குறைகூறிக்கொண்டும் இருப்பதை விட நம்மாலான அளவுக்கு நாமே சேர்ந்து சில முயற்சிகளை எடுத்து சில நிகழ்ச்சிகளை நடத்தி நம் வாழ்விடத்தை மேம்படுத்தலாம். இதை நாம் நம் நாட்டுக்குச் செய்யும் கடமையாகக் கருதவேண்டும். 

 

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!