`மண்டை ஓட்டுடன் போராடியபோது எம்.எல்.ஏ-க்கள் ஊதியத்தை உயர்த்திய தமிழக அரசு!' - வெளுத்து வாங்கும் வருண் காந்தி

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, வசதி படைத்த எம்.பி-க்களின் சம்பளத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார் பா.ஜ.க-வின் வருண் காந்தி எம்.பி.

வருண் காந்தி

அந்தக் கடிதத்தில், `அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரட்டிக் ரிஃபார்ம் என்ற ஆய்வறிக்கையில், இந்திய எம்.பி-க்களில் 449 பேருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதில் 132 எம்.பி-க்களுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம், ஒவ்வொரு எம்.பி-க்கும் மாதா மாதம் கிட்டத்தட்ட 2.7 லட்சம் ரூபாய் செலவிடுகிறது. நாடாளுமன்றத்தில் இருக்கும் 543 எம்.பி-க்களுக்கும் சேர்த்து 2016-ம் ஆண்டில் மட்டும் அரசு 176 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 

மேலும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விவசாயப் பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாகத் தமிழக விவசாயிகள் டெல்லியில் இருக்கும் ஜந்தர் மந்தரில் மண்டை ஓடுகளை வைத்துப் போராட்டம் செய்துகொண்டிருந்தனர். ஆனால், அங்கு 2018-ம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி இல்லாமல், நாடு முழுவதும் எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரே சம்பள முறை பின்பற்றப்பட வேண்டும். அதேபோல அனைத்து எம்.பி-க்களும் வசதி படைத்தவர்கள் இல்லை என்பதை அறிவேன். சிலர் இந்தச் சம்பளத்தை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். எனவே, வசதி படைத்த மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் சம்பளத்தை வாங்காமல் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். இது மக்கள் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டும்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!