வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (31/01/2018)

கடைசி தொடர்பு:16:23 (31/01/2018)

நச்சுப்புகை தொல்லை இனி இல்லை... BS VI நல்லதுதான்... ஆனால்...?!

கிறுகிறுவென தலை சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் தரம் நிர்ணயிக்கும் நிறுவனமான `Bureau of Indian Standards' (BIS), ஜனவரி 17 அன்று சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், `காற்றுமாசைக் குறைப்பதற்கு BSVI எனும் இன்ஜின் தரத்தை இந்திய வாகனங்கள் பின்பற்ற வேண்டும். ஏப்ரல் 2020-ம் ஆண்டிலிருந்து இது கட்டாயமாக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், `டெல்லியில் ஏற்கெனவே காற்றுமாசு மிகவும் மோசமாக உள்ள நிலையில், டெல்லியில் மட்டும் இந்தச் சட்டம் வரும் ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரும்' என்றும் தெரிவித்துள்ளது. 

BS VI

இந்தப் புதிய தரக்கட்டுப்பாடு மூலம், வாகனங்களிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையைப் பெருமளவு குறைக்கலாம். மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இது பெரிய சவால். இந்தியாவில் BS III இன்ஜின் மற்றும் எரிபொருள் தரத்திலிருந்து BS IV இன்ஜின் தரத்துக்கு மாற, நமக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. அடுத்த நிலைக்குப் போக, இப்போது நமக்கு இருப்பதோ இரண்டு ஆண்டுகள் மட்டுமே. அதிலும் BS V-யைத் தவிர்த்துவிட்டு நேரடியாக BS VI தரத்துக்குச் செல்கிறோம். என்னதான் அமெரிக்க, ஐரோப்பிய டெக்னாலஜி நம்மிடம் இருந்தாலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இந்த மாறுதல்களை மேற்கொள்வது சுலபமல்ல.

டாடா நிறுவனத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது டாடா நிறுவனத்திடம் 30-க்கும் அதிகமான அளவு இன்ஜின்கள் உள்ளன. கார்கள், டிரக்குகள், இலகுரக வர்த்தக வாகனங்கள் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. மாதம் 40,000-க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். இப்போது இந்த நிறுவனத்துக்கு இருக்கும் பெரிய சவால், வாகனங்களின் தயாரிப்புச் சூழுலை மாற்றியமைத்தாக வேண்டும் என்பதுதான். வாகனத் தயாரிப்புக்கு உட்பட்டுள்ள இயந்திரங்களையும் மாற்றியமைக்க வேண்டும். டாடா நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை, இந்தியாவில் ஆறு இடங்களில் உள்ளது. ஆறு ஆலைகளையும் மாற்றியமைக்க, குறைந்தபட்சம் 400 கோடி ரூபாயாவது செலவு செய்யவேண்டியதிருக்கும். இது தயாரிப்புச் செலவுகள் மட்டுமே, பல தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது, அந்தத் தொழில்நுட்பங்களைத் தயாரிப்புக்கு உட்படுத்துவது, தயாரித்த வாகனங்களை டெஸ்ட் செய்வது, டெஸ்ட்டிங் வாகனங்களை மாற்றியமைப்பது, தற்போது உள்ள பி.எஸ்.IV இன்ஜின்களை ரீவொர்க் செய்வது, அதற்கான தரச்சான்றிதழ்களை வாங்குவது... என, முடிப்பதற்கு ஏகப்பட்ட காரியங்கள் உள்ளன. 

BS VI

புதிய தரத்தின்படி, இன்ஜின் வெளியிடும் புகையிலிருந்து சல்ஃபர் எனும் நச்சுப்பொருளை 80 சதவிகிதம் குறைத்தாக வேண்டும்; 70 சதவிகிதம் நைட்ரஜன் ஆக்ஸைடு எனும் நச்சுக்காற்றைக் குறைக்க வேண்டும். இதற்கு இன்ஜினில் மாற்றங்கள் செய்தால் மட்டும் போதாது. Diesel Particulate Filter (DPF) மற்றும் Selective Catalytic Reduction (SCR) என்ற இரண்டு புதிய கருவிகளை இணைக்க வேண்டும். இணைத்த பிறகு Particulate matter எனும் மாசு அதிகரித்திடும். அதை 10 ppm எனும் அளவுக்குக் குறைத்தாக வேண்டும். அதற்காக Diesel Oxidation Catalyst (DOC) மற்றும் Particulate Filter எனும் சாதனங்களையும் இணைக்க வேண்டும். இதற்கு தனிச் செலவுகள் ஆவது மட்டுமல்லாமல், தனி நேரமும் தேவைப்படும்.

பொருத்துவதற்கு 10 நிமிடம் என்றால்கூட 2 மணி நேரத்தில் ஒரு முழு காரைச் செய்து முடிக்கக்கூடிய ஃபோர்டு நிறுவனம், ஒரு நாளில் இரண்டு கார்களை இழக்கும். ஒரு வருடத்துக்கு 730 கார்கள். இது ஒரு மாடலுக்கு மட்டுமே. 10 மாடல் கார்களை வைத்துள்ள ஒரு நிறுவனம், வருடத்துக்கு 7,300 கார்களை இழக்கும். கார் நிறுவனத்துக்கு மட்டுமே இந்த நிலை என்றால், மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் கார், பைக், மினி வேன், லாரி போன்று பல தளங்களில் பல மாடல்களில் இயங்குகின்றன. இந்த இழப்பு எவ்வளவு கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும், இந்த நஷ்டத்தை தற்காலிகமாகச் சமாளிக்க கையில் இருக்கும் உத்தி, நிரந்தரமாகச் சமாளிக்கத் தேவைப்படும் வளங்கள் என்ன... என்பதையெல்லாம் கணக்குப்போடவே நமக்கு ஒரு மாதம் தேவைப்படும்.

இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன, இதையெல்லாம் செய்து முடிக்க. ஆனால், இந்த நிறுவனங்கள் தினமும் தளர்ந்துபோகாமல் உழைத்தாக வேண்டுமே! இந்திய நிறுவனங்கள் இதற்குத் தேவையான அளவு புதிய தொழிலாளர்களை நியமிக்கும் என்பது உறுதியல்ல. இருக்கும் தொழிலாளர்கள்தாம் இந்த வேலைப்பளுவையும் சுமந்தாக வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை நிறுவனத்துக்குக் கொண்டுவரும்போது பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். குறைந்தபட்சம் 500 தொழிலாளர்களாவது தேவை. அவர்களுக்குப் பயிற்சியளித்தாக வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. ஆட்டோமொபைல் சார்ந்த ஒரு தொழில்நுட்பம் சரியான முறையில் இயங்குகிறதா, நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பதையெல்லாம் டெஸ்ட் செய்வதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படும். இரண்டு மாதங்களிலும் செய்து முடிக்கலாம். அதன் நம்பகத்தன்மை கேள்விக்கு உட்பட்டதே. மலைபோல் குவிந்துகிடக்கின்றன சவால்கள்! 

BS VI

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தச் சவால்கள் நீடிக்கும். மின்சார வாகனங்கள், ஹைபிரிட், மாற்று எரிபொருள் இன்ஜின்கள், BS-VI தரக்கட்டுப்பாடு எனக் கிடைத்த கேப்பில் எல்லாம் கோல் போட நினைக்கிறது மத்திய அரசு. ஹோண்டாவும் டொயொட்டாவும் ஹைபிரிட் வாகனத்தில் கவனம் செலுத்துகின்றன. மஹிந்திராவும் டாடாவும் மின்சார வாகனத்தில் கவனம் செலுத்துகின்றன. இப்போது மாருதி சுஸூகியும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளது. ஒருபுறம் வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்தப் புதிய விதிகள் அழுத்தம் கொடுத்தாலும், உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது உற்சாகத்தை அளிப்பதாகவே உள்ளது. உள்நாட்டு உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்களுக்கு இந்தச் சந்தர்ப்பங்கள் மூலம் தொழில் பெருகும். புதிய விதிகளுக்கு ஏற்ப புதிய கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உற்பத்தி செய்யவேண்டிய சூழலில், சிறிய நிறுவனங்கள் இதுபோன்ற கருவிகளை அதிக தரத்தோடும் குறைவான விலையிலும் உற்பத்தி செய்யுமேயானால், வாகனத் தயாரிப்பாளர்களுக்கான தொழில் சுமை குறைந்துவிடும்.

ஜெர்மனியைச் சேர்ந்த பாஷ் நிறுவனம், தற்போது இதற்காக lean electronic fuel injection system (LEFIS) எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கிவருவதாகவும், அதை 2020-ம் ஆண்டுக்குள் தயாரிப்புக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  பாஷ், க்யூமின்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை BS-VI தரத்துக்கு இன்ஜினைக் கொண்டுவருவதற்கு எளிய வழியையும், நடைமுறைக்கு ஏற்றார்போல விலை கட்டுப்படியாகும்படி ஒரு சாதனத்தையோ அல்லது தொழில்நுட்பத்தையோ உருவாக்கலாம். அப்படியொரு தொழில்நுட்பம் கையில் இருந்தால், அதைச் சந்தைப்படுத்தலாம்; லாபம் ஈட்டலாம். அதற்குச் சரியான நேரம் இது. 

BS VI

`பிஎஸ் 6' வாகனங்களுக்கு அதற்கேற்ப எரிபொருள் தேவைப்படும். எண்ணெய் நிறுவனங்களும் 2020-ம் ஆண்டில் முழுவதுமாக பிஎஸ் 6 எரிபொருளை விற்பனை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், வாகனத் தயாரிப்பாளர்கள் BS-VI வாகனங்களை டெஸ்ட் செய்வதற்கு இந்த எரிபொருள் தற்போது தேவைப்படுகிறது. அதனால் ஏப்ரல் 1, 2020-க்கு முன்னரே இவர்கள் எரிபொருளை பரவலாக சப்ளை செய்ய ஆரம்பித்தால் மட்டுமே வாகன உற்பத்தியாளர்களால் இந்த வாகனங்களைத் தகுந்த முறையில் டெஸ்ட் செய்து வெளியிட முடியும். இல்லையென்றால், இந்த BS 6 எரிபொருளை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தாக வேண்டும். தயாரிப்பாளர்களின் செலவுகள் அதிகரிக்கும்.

எண்ணெய் நிறுவனங்களுக்குக் கூடுதல் சவாலும் உள்ளது. பிஎஸ் 6 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது கிடைக்கும் பெட்ரோல், டீசல் விலையைவிட அதிகமாகவே இருக்கும். ஏற்கெனவே கூடிவரும் பெட்ரோல்-டீசல் விலையில், மக்கள் மீண்டும் ஒரு விலையேற்றத்தை வரவேற்பார்களா என்பதை அரசு பொருட்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி வந்தால் இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கலாம். அதுவரை அதிக விலையைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். வாகனங்களில் புதிய மாற்றங்கள் நிகழ்வதால் வாகனங்களின் விலையும் அதிகரிக்கும். அதற்கேற்ப மெயின்டனன்ஸ், சர்வீஸ் போன்றவற்றின் விலையும் கூடும். இதையெல்லாம் சகித்துக்கொள்வார்களா மக்கள்? 

BS-VI

தொழில்நுட்பம் கையில் இருந்தாலும், உற்பத்தித்திறன் பெருமளவு இருந்தாலும் சிக்கலான பல சவால்களை எதிர்நோக்கியுள்ளன இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்தச் சவால்களையெல்லாம் தாண்டி நிறுவனங்கள் வெற்றிபெற, எல்லாம் வல்ல மத்திய அரசைப் பிரார்த்திப்போம்!


டிரெண்டிங் @ விகடன்