வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (31/01/2018)

கடைசி தொடர்பு:16:47 (31/01/2018)

நிர்பயாவைப் பற்றி என்ன சொன்னார் ராய்ப்பூர் ஆசிரியை?

``பெண்கள், தனக்கு அழகான முக அமைப்பு இல்லாவிட்டால், உடல் அழகைக் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்” - இப்படி பாடம் நடத்தியிருக்கிறார் ராய்ப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் சினேஹலதா ஷங்க்வார்.

9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயிரியல் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது, பெண்கள் மதிப்புக்குரிய முறையில் உடை அணிய வேண்டும் என அறிவுறுத்திய சினேஹலதா, பாலியல் வன்புணர்வுக்கான காரணங்களைப் பட்டியலிடத் தொடங்கியிருக்கிறார். ``2012-ம் ஆண்டு, 23 வயதுடைய நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது குற்றமாக இருந்தாலும், அதில் அவருக்கும் பங்கு இருக்கிறது. நிர்பயா குற்றமற்றவரல்ல'' என்று கூறியிருக்கிறார். வகுப்பில் மாணவர்கள் முன்னிலையில் மாணவிகளிடம், ``ஜீன்ஸ் அணிவதும், லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதும், அரைகுறை ஆடை உடுத்துவதும், ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்வதுமே இத்தகைய குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன'' என்றார்.

நிர்பயா

``பெண்கள், முகங்கள் அழகாக இல்லையென்றால் உடலைக் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள். பெண்களுக்கு வெட்கம் என்பது துளியும் இல்லாமல்போய்விட்டது. கணவர் அல்லாத ஓர் ஆணுடன் இரவில் நிர்பயா எதற்கு தனியாக வெளியில் சென்றார்? இந்த விஷயம் எதற்காகப் பெரிதாக்கப்படுகிறது என்பது புரியவில்லை. அந்த இரவு நேரத்தில் நிர்பயாவின் பெற்றோர் அவரை வெளியில் செல்ல அனுமதித்திருக்கக் கூடாது. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கான தண்டனை அது. கணவர் அல்லாத ஓர் ஆண் நண்பனுடன் சுற்றும் ஒரு பெண், மற்ற ஆண்களுடனும் சகஜமாக இருப்பாள் என ஆண்கள் முடிவுசெய்துவிடுவார்கள்” என சினேஹலதா கூறிய ஆடியோவைப் பதிவுசெய்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவிகள்.

வகுப்பறையில் பதிவுசெய்யப்பட்ட அந்த ஆடியோவை, பள்ளியின் முதல்வர் பகவான் தான் அஹிரேவிடம் அளித்து, தாழ்ந்த கருத்துகளால் மாணவிகளை அவமதித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அந்த மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், இந்தப் புகார் குறித்து விசாரித்துSnehalata Shankhwar நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது. இந்தப் புகாரை அளித்தவர்களுள் ஒருவரான அந்தப் பள்ளி மாணவியின் தந்தை தனுக்லால் சாஹூ, ``என் மகளும் அவள் வகுப்பு மாணவர்களும் மிகவும் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். மனரீதியாகக் காயப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் முன்னிலையில் அந்த ஆசிரியர் பேசிய வார்த்தைகள் மோசமானவை” என்று ஏ.என்.ஐ செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.  

`மாணவிகளை அவமதித்திருக்கும் இத்தகைய கருத்துகளை ஏன் தெரிவித்தீர்கள்?' என்ற  கேள்விக்குப் பதிலளித்த அசிரியர் சினேஹலதா,

``11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சிலர், இரவு 8:30 மணிக்குமேல் வெளியில் உலவியதைப் பார்த்தேன். மாணவிகளின் பாதுகாப்பு, அவர்களின் கையில்தான் இருக்கிறது. மாணவிகள் லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதும், ஜீன்ஸ் அணிவதும் கேந்திரிய வித்யாலயாவின் code of conduct-க்கு எதிரானவை. பெற்றோர்கள், தங்களது மகள்கள் சரியான சீருடை அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். நிர்பயாவுக்கு நடந்தது தவறானது. ஆனால், நிர்பயா இரவு நேரத்தில் வெளியில் செல்லாமல் இருந்திருந்தால், அவருக்கு அப்படி ஒரு நிகழ்வு நேர்ந்திருக்காது” என்றார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர் ஏ.பி.சிங், ``எனது மகளோ, தங்கையோ திருமணத்துக்கு முன்னான உறவில் இருந்தாலோ, ஒழுக்கம் தவறி நடந்தாலோ என் குடும்பத்தினர் முன்னிலையில் நான் அவர்களை எரித்துக் கொன்றிருப்பேன். ஒரு பெண் ரத்தினத்துக்கு ஒப்பானவள். ரத்தினத்தைத் தெருவில் போட்டுவிட்டு, நாய் தூக்கிச்சென்றுவிட்டது எனக் குற்றம்சாட்டுவீர்களா? நாயைக் குற்றம் சொல்ல முடியாது” என்று பேசினார்.

பிபிசி நிறுவனத்தின் முயற்சியாக,  லெஸ்லி உட்வின் இயக்கிய `இந்தியாவின் மகள்' ஆவணப்படத்துக்காக, நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங், ``இரண்டு கைகள் சேர்ந்தால்தான் ஒலி எழுப்ப முடியும். வன்புணர்வு நடப்பதற்கு, ஆணைவிட ஒரு பெண்ணே முக்கியக் காரணம். நல்ல பெண்கள் 9 மணிக்குமேல்,  வீட்டுக்கு வெளியே வர மாட்டார்கள். வன்புணர்வு செய்யும்போது அந்தப் பெண் அமைதியாக இருந்திருந்தால், அவளை எதுவும் செய்திருக்க மாட்டார்கள். உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. 20 சதவிகிதப் பெண்கள் மட்டுமே நல்லவர்களாக உள்ளனர்” என்று துளியும் குற்றவுணர்வின்றி வகுப்பெடுத்தது மீண்டும் நினைவுக்குவருகிறது.

எங்கள் பண்பாட்டில் குற்றம் உண்டு. ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள். குற்றம் புரிய பெண்கள்தான் தூண்டுகிறார்கள் என்ற மனநிலை மாறாதவரை, எந்தச் சூழலும் மாறப்போவதில்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்