வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (31/01/2018)

கடைசி தொடர்பு:20:40 (31/01/2018)

`எடு பணத்தை!' - குழந்தையின் தலையில் துப்பாக்கி வைத்து பெற்றோரை மிரட்டிய கொள்ளையன்

கொள்ளை

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்-மில் குழந்தையின் தலையில் துப்பாக்கி வைத்து பெற்றோரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் சென்ற 25-ம் தேதி நடைபெற்றுள்ளது. ஏ.டி.எம் மையத்திலிருந்த சிசிடிவி கேமராவில் கொள்ளைச் சம்பவம் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

தாய் மற்றும் தந்தை தங்கள் குழந்தையுடன் ஏடிஎம் மையத்துக்குப் பணம் எடுக்க வருகின்றனர். தாயும் குழந்தையும் ஒரு ஓரத்தில் நிற்கின்றனர். தந்தை பணத்தை எடுக்க முயல்கிறார். அப்போது முகத்தைத் துணியால் மூடியபடி கொள்ளையன் துப்பாக்கியுடன் ஏடிஎம் மையத்துக்குள் நுழைகிறான். முதலில் தந்தையை மிரட்டி பணம் பறிக்க முயல்கிறான். அவர் மறுக்கிறார்.

ஆத்திரமடைந்த கொள்ளையன் சிறுவனின் தலையில் துப்பாக்கி வைத்து பணத்தை எடுத்துத் தரும்படி கேட்கிறான். இதனால் பதறிப்போன தந்தை அவசர அவசரமாக ஏடிஎம் எந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட அவன் அங்கிருந்து வேகமாக வெளியேறுகிறான். இவ்வாறான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. குழந்தையின் தலையில் அவன் துப்பாக்கி வைத்து மிரட்டும் காட்சி பார்ப்பவர் நெஞ்சைப் பதறச் செய்கிறது.