வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (01/02/2018)

கடைசி தொடர்பு:11:42 (01/02/2018)

“எட்டு மாதக் குழந்தைக்கு ஆடைக் கட்டுப்பாடு கற்றுத் தரலாமா?” - ராய்ப்பூர் ஆசிரியைக்கு நிர்பயாவின் கேள்வி

நிர்பயா

ராய்ப்பூர் ஆசிரியைக்கு வணக்கம்! 

நான்  நிர்பயா பேசுகிறேன். 'ஆறு வருடங்களுக்கு முன்பு,  இரவில் ஆண் நண்பர் ஒருவருடன் தனியாகப் பேருந்தில் சென்றதால், பாலியல் வன்முறைக்கு ஆளாகி இறந்தாள் நிர்பயா. அதனால் நீங்கள் 'ஒழுக்கமாக' இருக்க வேண்டும்' என்று உங்கள் வகுப்புப் பெண் குழந்தைகளுக்கு நீங்கள் அறிமுகப்படுத்திய அதே நிர்பயாதான் பேசுகிறேன். 

நாட்டின் தலைநகரில் எனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மரணம், இந்தியாவையே உலுக்கியது. என் உயிருக்கான நியாயம் கேட்டு, பல பெண்கள் தெருவில் திரண்டு போராடினர். பெண்களின் பாதுகாப்புப் பற்றி பல விவாதங்கள் எழுந்தன. ஆனால், என் மரணத்தால், கொலையால், வழக்கால், வழங்கப்பட்ட தண்டனையால், இந்தச் சமூகம் பெண்களை நடத்தும் முறையில், பார்க்கும் பார்வையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்றால், 'அதெல்லாம் இல்லை' என்ற பதிலை நீங்கள் அழுத்தமாகத் தந்திருக்கிறீர்கள். 'பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிக்குப் பெண்ணே பொறுப்பு, அவள் உடையே பொறுப்பு' என்ற மூடநம்பிக்கையிலிருந்து பிடிவாதமாக வெளிவர மறுக்கும் உங்களிடமும், உங்களைப் போன்றவர்களிடமும் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன என்னிடம். 

நிர்பயாஉங்கள் வகுப்பறையில் பள்ளிச் சீருடையில் அமர்ந்திருக்கிறார்கள் என் தங்கைகள். அவர்களிடம் என்னை நீங்கள் ஒரு தவறான உதாரணத்தை முன்வைக்கிறீர்கள். 'நீங்கள் இரவு 8:30 மணிக்கு மேல் வெளியில் செல்லக் கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது, லிப்ஸ்டிக்  போடக் கூடாது,  இப்படியெல்லாம் செய்வதால்தான், உங்களுக்குப் பாலியல் வன்முறை, பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. அப்படித்தான் நிர்பயாவுக்கும் நடந்தது’ என்று ‘அறிவுரை’ கூறுகிறீர்கள். உங்களின் ஆடியோ தேசமெங்கும் பரவிவரும் அதே நாளில்தான், டெல்லியில் எட்டு மாதப் பெண் குழந்தை ஒன்று, உறவினர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் செய்தியும் வருகிறது. உங்களுக்கான பதிலும், கேள்வியுமாக ரத்தம் கசியக் கிடக்கிறது அந்த சிசு. அந்தப் பச்சிளம் குழந்தை எந்த  ஆடை அணிந்து, எந்த லிப்ஸ்டிக் பூசி, தன் உறவினரை கவர்ந்து இழுத்தது ஆசிரியை அவர்களே? நீங்கள் உதிர்த்த மன்னிக்க முடியாத சொற்களுக்காக உங்களின் மனசாட்சியைத் தைக்கும் கேள்வி இது. 

உயர்தரமான கல்வியை அளிப்பதாக நம்பப்படுகிற நாட்டின் ஒரு பிரபல பள்ளி நிர்வாகத்திலிருந்து உருவான ஆசிரியையான நீங்கள், பெண் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டியது தைரியத்தையும் சுதந்திரத்தையும். ஓர் ஆண் தவறான முறையில் அணுகும்போது தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது, இன்றைய பெண்களுக்குக் கற்றுத்தரப்பட வேண்டியதன் அவசியத்தை, தொடர்ந்து நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வலியுறுத்துக்கொண்டே இருக்கின்றன. ஏன், ஐந்து வயதுச் சிறுமிகளுக்குக்கூட 'குட் டச், பேட் டச்' சொல்லிக்கொடுக்க வேண்டிய சூழல்தானே இங்கு நிலவுகிறது? ஆனால், நீங்கள் செய்தது என்ன? நாம் வாழும் வாழ்வுக்குப் பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும் உறுதிபடுத்திக்கொடுக்க வேண்டிய கல்விச்சாலையில், 'சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டு நடுங்கி அஞ்சி ஓடி ஒளிந்துகொள்' என்று‘அறிவுரை’ வழங்கியிருக்கிறீர்கள். இதற்கு எதற்குக் கல்வி, பள்ளி, ஆசிரியர்கள்?

இந்தச் செய்தியும் உங்களை வந்தடைந்திருக்கும் என்று நம்புகிறேன். ஹைதராபாத்தில் எட்டு மாத கர்ப்பிணி ஒருவர்  மிகக் கொடூரமான  முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் செய்தித்தாள் பக்கங்களைப் புரட்டினால், உள்ளூரிலிருந்து மெட்ரோபாலிட்டன் நகரங்கள்வரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும், சமூக வன்முறையும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் செய்திகள் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். இப்படியான ஒரு சூழலில், நாம் நம் பெண் பிள்ளைகளுக்கு தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டுமா, அல்லது உங்கள் 'கொள்கை'யின்படி ஒரு பெரிய பூட்டை கையில் கொடுத்து, 'உன் வீட்டிற்குள் போய் கதவைத் தாழிட்டுக்கொள்' என்று அவர்களின் எதிர்காலத்தையும் தன்னம்பிக்கையையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமா? 

என் மரணத்துக்குப் பின், நாடே என்னை 'இந்தியாவின் மகள்' என்று அழைத்தது. இந்த மகளைப் பற்றி, அந்தப் பள்ளிச் சிறுமிகளுக்கு நீங்கள் சொல்லத் தவறிய விஷயங்களை நான் சொல்கிறேன் கேளுங்கள். தலைநகரில், இரவில், பேருந்தில், ஆறு ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு, டெல்லி நெடுஞ்சாலையில் தூக்கிவீசப்பட்டு, அந்த நடுங்கும் குளிரிலும், யாராவது வந்து என்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உயிரைப் பிடித்துவைத்துக்கொண்டு போராடினேன். பெண் உறுப்பில் குரூரமாகத் தாக்கப்பட்ட உயிர்வதைக்கும் வலியுடன் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருந்த தருவாயிலும், ‘நான் மீண்டு வந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித்தருவேன்’ என்று மனவலிமையுடன் கூறினேன். நீங்கள் என் தங்கைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது, அந்த வலிமையை. நீங்கள் என் தங்கைகளுக்குக் கற்றுதர வேண்டியது என் மரணத்துக்குப் பிறகு எனக்காக நியாயம் கேட்டு நாடு முழுவதும் கிளர்ந்த எழுச்சியை. நீங்கள் என் தங்கைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது, மகளைக் குற்றுயிராகப் பறிகொடுத்த பின்னரும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக நூறு முறை நீதிமன்றம் ஏறிப் போராடிய என் பெற்றோரின் அன்பை, உறுதியை. நீங்கள் என் தங்கைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது, என்னைக் கொலைசெய்த குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் மூலம் பெறப்பட்ட பெண் உயிருக்கான நீதியை. 

எனக்கு நேர்ந்த கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நேராதிருப்பதில்தான், என் ஆன்மாவுக்கான சாந்தி கிட்டும். ஆனால் நீங்களோ, என்னை இரண்டாவது முறையாகக் கொலை செய்திருக்கிறீர்கள். 'நிர்பயாபோல இருக்காதே' என்று ஒரு பள்ளியில், வகுப்பறையில், மாணவிகளிடம் நீங்கள் போதிக்கும் வார்த்தைக் கொலை, முதல் கொலையைவிட வலிக்கிறது எனக்கு. உங்களைப்போன்ற துருப்பிடித்த மூளைகள் இருக்கும்வரை, நிர்பயாக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அதை நீங்களும் நியாயப்படுத்திக்கொண்டேதான் இருப்பீர்கள்.  

அன்புடனும் ஆதங்கத்துடனும், 

ஒரு நிர்பயா

 

சென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...


டிரெண்டிங் @ விகடன்