வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (01/02/2018)

கடைசி தொடர்பு:11:50 (01/02/2018)

சாலையில் நடந்து வந்தவருக்கு திடீர் மாரடைப்பு! உயிரைக் காப்பாற்றிய காவலர்களுக்குக் குவியும் பாராட்டுகள்

நடுரோட்டில் நெஞ்சுவலியால் தவித்த பாதசாரி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ஹைதராபாத் ட்ராஃபிக் போலீஸார் 2 பேரின் மனிதநேயத்துக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. தெலங்கானா மாநிலம் சார்மினார் அருகே உள்ளது பகதூர்புரா நகரம். பரபரப்பான இந்த நகரத்தில் நேற்று, வயதான பாதசாரி ஒருவர் சாலையைக் கடக்கும்போது, திடீரென நெஞ்சுவலியால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு கீழே சரிந்ததுடன், பேச்சுமூச்சு இல்லாமல் இருந்தார். இதைப் பார்த்த, அங்கு பணியில் இருந்த ட்ராஃபிக் போலீஸார் இன்யாதுல்லா கான், சந்தன் சிங் ஆகிய இருவரும் உடனடியாக விரைந்து வந்து, வயதான அந்தப் பாதசாரிக்கு முதலுதவி புரிந்தனர். 

அதேநேரம், உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, வயதான அந்தப் பெரியவர் காப்பாற்றப்பட்டார். போலீஸாரின் இந்தச் செயலை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது, தற்போது வைரலாகப் பரவுவது மட்டுமல்லாமல், முதியவரின் உயிரை மீட்ட இரண்டு ட்ராஃபிக் போலீஸார்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மேலும், ஹைதராபாத் துணை ஆணையர் ரங்கநாத் உள்ளிட்ட உயரதிகாரிகள், இன்யாதுல்லா கான் மற்றும் சந்தன் சிங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க