வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (01/02/2018)

கடைசி தொடர்பு:14:06 (01/02/2018)

வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்!

2018 - 19-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல்செய்தார். இந்த ஆட்சியின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால், வர்த்தகர்கள் உட்பட அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு வெகுவாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே இன்று தாக்கல்செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், வருமான உச்சவரம்பில் எந்தவித மாற்றமும்  செய்யப்படவில்லை.  வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்தது. அதற்கு மாறாக, வருமான உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என அருண்  ஜெட்லி அறிவித்தார். அதன்படி 0 - 2.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது. 2 - 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 5 சதவிகிதமும், 5 - 10 லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவிகிதமும், ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவிகிதமும் வரி வசூல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன் என அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். வரி ஏய்ப்பு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதேவேளை, 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல்செய்துள்ளனர். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இந்த கூடுதல் வருவாய் அரசுக்குப் போதுமானதாக இல்லை.  கடந்த 3 வருடங்களில், வருமான வரி உச்சவரம்பில் அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. எனவே, வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யாமல் பழைய முறையே பின்பற்றப்படும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க