ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்திய ஒரு என்கவுன்டர்!

ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சித் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஓர் என்கவுன்டர். 

பாரதிய ஜனதா தோல்வி

ஆஜ்மீர் மற்றும் அல்வார் நாடாளுமன்றத் தொகுதிகள், மண்டல்கர் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. ஆஜ்மீர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரகு ஷர்மா வெற்றி பெற்றார். அல்வார் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கரண் சிங் யாதவ் வெற்றியடைந்தார். மண்டல்கர் சட்டமன்றத் தொகுதியில் இறுதிச்சுற்று வரை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முன்னிலையில் இருந்தாலும், கடைசிச் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளையுமே பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது

ராஜஸ்தானில் ராஜ்புத் மக்களும் குஜ்ஜார் இன மக்களும் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் கருத்து வேறுபாடு கொண்டது பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்விக்கு முக்கிய காரணம். கடும் எதிர்ப்பையும் மீறி பத்மாவத் திரைப்படம் வெளியான விஷயத்தில் ராஜ்புத் மக்கள் பாரதிய ஜனதா அரசுமீது கடும் கோபம் கொண்டனர். ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த நிழல் உலக தாதா ஆனந்ந் பால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதும் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு வித்திட்டது. ஆனந்த் பால் சுட்டுக் கொல்லப்பட்டதும் பல்வேறு ராஜ்புத் இன அமைப்புகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவே வாக்களிப்போம் என வெளிப்படையாக அறிவித்தன.

பொதுவாகவே ராஜ்புத் மக்கள் முரட்டுத்தனமாக வாட்டசாட்டமான உடல்வாகு கொண்டவர்களைத் தங்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்கள். குதிரையில் செல்வதைக் கௌரவமாக வீரமாகப் பார்ப்பார்கள். இதையெல்லாம், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆனந்த்பால், சமூக வலைதளங்களில் தன்னைப் பெரிய வீரன்போல காட்டிக்கொண்டு புகைப்படங்களை வெளியிடுவார். ராஜஸ்தானில் ராஜ்புத்திரர்களைப் போலவே ஜாட் இனத்தவர்களும் அதிகம் வசிக்கின்றனர். இரு இனத்தவர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஜாட் இனத்தவர்களுடன் ஆனந்த்பால் பலமுறை மோதல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனந்த் பாலின் தொல்லை தாங்காத ராஜஸ்தான் போலீஸ் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவரை சுட்டுக்கொன்றது. இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன. ஆனந்த் பால் சுட்டுக் கொல்லப்பட்டதும் ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது. ஆனந்த்பாலின் குடும்பத்தினர் சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். ராஜஸ்தான் அரசு மறுத்துவிட்டது. 

பாரதிய ஜனதா தோற்க காரணமான என்கவுன்டர்

அதுபோல், ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் 5 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். வசுந்தராஜே அரசு குஜ்ஜார் இன மக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. விளைவு... தேர்தல் முடிவு பாதகமாகிப்போனது. மேற்கு வங்கத்தில் உலுபெரியா நாடாளுமன்ற மற்றும் நவுபாரா சட்டமன்றத் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தத்தில் நடந்த 5 இடைத்தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!