வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (01/02/2018)

கடைசி தொடர்பு:17:49 (01/02/2018)

பி.ஜே.பி-யில் ஒற்றை அதிகார மையம்! - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பி.ஜே.பி. - காங்கிரஸ்

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பி.ஜே.பி-க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் இப்போதே வார்த்தைப் போர் ஏற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அண்மையில் மேகாலயா மாநில காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராகுல்காந்தி அணிந்திருந்த உடை குறித்து பி.ஜே.பி. சர்ச்சையைக் கிளப்பியதும், அதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அளித்த விளக்கமும் எனலாம்.

மேகாலயா மாநிலத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் பங்கேற்றபோது, கறுப்பு மேலாடை அணிந்திருந்ததை பி.ஜே.பி. விமர்சனம் செய்துள்ளது. பதிலுக்கு காங்கிரஸ் கட்சியும் தங்கள் தரப்பு கருத்தை எடுத்துவைத்துள்ளது.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, மோடி அணிந்திருந்த கோட் குறித்து காங்கிரஸ் கட்சி சர்ச்சையைக் கிளப்பியது. மோடி அணிந்த ஆடையின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. 

ராகுல் காந்திஇந்நிலையில், அண்மையில் ஷில்லாங்கில் அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, 63 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கறுப்பு  மேலாடையை அணிந்திருந்தார் என்று பி.ஜே.பி. குறைகூறியுள்ளது. பி.ஜே.பி. மேகாலயா பிரிவு வெளியிட்டிருந்த ட்விட்டர் செய்தியில், "ராகுல் காந்தி அணிந்திருந்த கறுப்பு மேலாடையின் விலை கருப்புப் பணத்தில் வாங்கப்பட்டதாக இருக்கலாம். மேகாலயாவில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்துள்ளது. இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, ராகுல் காந்தி மேகாலயா மாநில அரசின் செயல்பாடு குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்திருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தது.

பி.ஜே.பி.-யின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சௌவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பி.ஜே.பி-யின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில் அவர், "வசதி படைத்தவர்களுக்கான அரசை நடத்திவரும் பி.ஜே.பி-க்கு, ராகுல்காந்தி குறித்து கேள்வியெழுப்ப எந்த உரிமையும் இல்லை. ராகுல்காந்திக்கு ஆதரவு பெருகி வருவதைக் கண்டு பி.ஜே.பி. விரக்தியடைந்துள்ளது. அதன் காரணமாகவே, ராகுல் பற்றி பி.ஜே.பி. விமர்சனம் செய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரம், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் காய்-கறிகளின் விலை அதிகரிப்பு ஆகியவை மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு முடங்கியுள்ளது. ஆனால், ராகுல் காந்தியோ நாட்டில் உள்ள இளைஞர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளார். 

மோடியுடன் ஒபாமாதன் கோட்டில் பெயரைப் பதிவு செய்தவருக்கு ராகுல் காந்தியின் மேலாடை குறித்து கேள்வி கேட்க அதிகாரம் இருக்கிறதா? ராகுலின் மேலாடை விலை பி.ஜே.பி-க்கு எப்படித் தெரியும்?" என்றார். பி.ஜே.பி-யின் விமர்சனத்திற்கு கடும் பதிலடியாக ரேணுகா சௌவுத்ரியின் கருத்து அமைந்துள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தியை இந்த நாடு இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும், ஒற்றை அதிகார மையமாக வலம் வருபவருக்கு மத்தியில், எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தாலும் தன்னடக்கத்துடன் வலம் வருபவர் ராகுல் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

"இந்து மதத் தத்துவங்களைப் பற்றியும், புத்த தியான வழிமுறைகளைப் பற்றியும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் விரிவாக எடுத்துரைக்க முடியும். இந்து மதத்தின் மீதும், அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர் ராகுல்காந்தி. அவரே ஒரு சிவபக்தர். தற்பெருமை பேசாது, தேசத்தின் நலன் குறித்தும், புதிய தேடல்கள் குறித்தும்தான் அவர் சிந்தித்துக்கொண்டே இருப்பார். தனக்கு அனைத்தும் தெரியும் என்று ஒற்றை அதிகார மையமாக சிலர் (மோடி) வலம் வருகின்றனர். ஆனால், ராகுலைப் பொறுத்தவரை தனக்கு எல்லாம் தெரியாது என்பதை ஒப்புக் கொள்வார். அதே நேரத்தில் மக்களின் கேள்விகளுக்கு அவர் விடை தேடுவார். அனுபவம் மிக்கவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவார். இதுதான் ராகுலுக்கும், பிற தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு" என்றார் சசி தரூர்.
 
நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில் கொண்டு பி.ஜே.பி., இப்போதே பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவரான ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது என்பதையே இதுபோன்ற கருத்து மோதல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்கால இந்தியா ராகுல் காந்தியின் காங்கிரஸ் கையிலா, மோடியின் பி.ஜே.பி. கையிலா என்பதை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்