Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

2018 மத்திய பட்ஜெட்டில் கவனிக்கவேண்டிய 15 விஷயங்கள்!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2018-19 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசியபடி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கவனிக்கவேண்டிய முக்கியமான 15 விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்...

பட்ஜெட்

1) 10 கோடிக் குடும்பங்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு 

ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது நான்கு பேர் இருக்கும்பட்சத்தில் ஒரு நபருக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் மருத்துவக் காப்பீடு கிடைக்கும். `உலக அளவில் இப்படியொரு மருத்துவத் திட்டம்'' இல்லை என்று பெருமையாக நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டுத் திட்டங்கள் நாடு முழுவதும் நிறையவே இருக்கின்றன. அவற்றுக்கான மரியாதையை மருத்துவமனைகளில் போய் விசாரித்துப்பார்த்தால்தான் தெரியும். திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டம்தான். ஆனால், அதை அறிவிப்பதோடு நிற்காமல் அதன் செயல்பாடு எப்படியிருக்கிறது என்பதையும் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும். 

2) மூத்த குடிமக்களுக்கான வரி தள்ளுபடி 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு

மூத்த குடிமக்களுக்கான வரி தள்ளுபடி தற்போது 30 ஆயிரம் ரூபாயாக இருப்பதை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறது. 80டி-யின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரி தள்ளுபடி, மூத்த குடிமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மூத்த குடிமக்கள் செய்யும் சேமிப்புத் திட்டங்களான எஃப்.டி மற்றும் ஆர்.டி-யில் டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி வருமானம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

3) பெண் ஊழியர்களுக்கான பி.எஃப் பங்களிப்பு குறைப்பு!

முதல்முறையாக வேலைக்குப் போகும் பெண்களுக்கான பி.எஃப் பங்களிப்பு, 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்கள் பெறும் மாத ஊதியத்தொகை சிறிது அதிகமாகும். மேலும், இவர்களுக்கு பிஎஃப் தொகையில் மீதமுள்ள 4 சதவிகிதத்தை அரசு அளிக்கவிருக்கிறது. இதனால் அவர்களுடைய பி.எஃப் முதிர்வுத்தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.  

4) நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி

பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்குக் கிடைக்கும் நீண்டகால அடிப்படையிலான ஆதாயத்துக்கு வரி இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான லாபத்துக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சந்தையின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும். நீண்டகால அடிப்படையில் முதலீட்டை வைத்திருப்பவர்கள் குறைவு. அதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பார்க்கிறவர்கள் இன்னும் குறைவு. எனவே, இதனால் பாதிக்கப்படுபவர்கள் குறைவு. ஒருவர் ஓர் ஆண்டுக்காலத்தில் 1.5 லட்சம் ரூபாய் லாபம் அடைந்தால், ஒரு லட்சம் ரூபாய் போக மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாய்க்கு 10 சதவிகிதம் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். 

5) செல்போன்களின் விலை உயரும்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்குக் கலால்வரி 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

6) கல்வித் துறையும் வேலைவாய்ப்பும் 

இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இந்த பட்ஜெட்டில் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு கொஞ்சம் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தர புதிய திட்டம் வகுக்கப்படும் என்றும், ஒருங்கிணைந்த பி.எட் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நவோதயா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. நல்ல விஷயம். ஆனால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இல்லை.

7) மருத்துவத்துக்கு முக்கியத்துவம்

மருத்துவக் கல்லூரிகள் இப்போது மிக முக்கியமான தேவையாக இருக்கின்றன. இந்தியாவில் இன்ஜினீயர்களுக்குச் சம்பளம் குறைவாகவும், மருத்துவர்களுக்குச் சம்பளம் அதிகமாகவும் இருக்கக் காரணம், இன்ஜினீயர்கள் கோடிக்கணக்கில் இருப்பதாலும், டாக்டர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாலும்தான். இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு இப்போதிருக்கும் டாக்டர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு டாக்டர்கள் தேவை. இந்த பட்ஜெட்டில் 24 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. நீட் தேர்வு மீதான எதிர்ப்பைக் குறைப்பதற்கும் அரசு இந்த முடிவு கைகொடுக்கும். நல்ல தொலைநோக்கு சிந்தனைதான்.

8) இதுதான் கொடுத்து வாங்குவதா?

தனிநபர் வருமானவரி உச்சவரம்பை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது நடக்கவில்லை. இது, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. மாற்றம் செய்யப்பட்டிருந்தால் கொஞ்சம் பலன்தான் என்றாலும், மாற்றம் செய்யாததால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. மேலும், நிலைக்கழிவு 40 ஆயிரம் ரூபாய் எந்த ஆவணமும் இல்லாமல் வரிவிலக்கு செய்யப்படும் என்பது ஆறுதலான விஷயம். ஆனால், கல்வி மற்றும் மருத்துவத்துக்கான செஸ் வரியை 3 லிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது. ஓர் இடத்தில் சலுகையைக் கொடுத்து, மற்றோர் இடத்தில் சலுகையை எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

9) கண்டுகொள்ளப்படாத துறைகள்

தொழில் துறையும் விளையாட்டுத் துறையும் இந்த பட்ஜெட்டிலிருந்தே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் தொழில் துறையின் முன்னேற்றத்துக்காகப் பெரிதாக இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் எதுவும் இல்லை. உள்கட்டமைப்புத் துறை சார்ந்த திட்டங்களும் பெயரளவில்தான் இருக்கின்றன. ஏற்றுமதியை ஊக்குவிக்க எந்தத் திட்டமும் இல்லை.  இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி ஆகும் டெக்ஸ்டைல், ரப்பர் போன்ற துறைகள் இந்த பட்ஜெட்டில் எந்தப் பலனையும் அடையவில்லை. விளையாட்டுத் துறையில் துளியும் கவனம் செலுத்தவில்லை. ஆட்டோமொபைல் துறைக்கும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை.

10) வைஃபை மட்டும் போதுமா?

`டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டத்தை ஆரம்பித்து, அதற்கான மிகப்பெரிய சந்தையை பெரு நிறுவனங்களுக்காகவே உருவாக்கித் தந்திருக்கிறது மத்திய அரசு. கிராமப்புறங்களில் வைஃபை வசதிகள் அமைத்துத் தரப்படும் என்று இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்துவதற்கே இங்கே ஆள்கள் இல்லை. கிராமப்புறத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தந்து அவர்களையும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று மொபைல்போனுடன் அமரவைக்கத் திட்டமா?

11) மூங்கிலுக்கு திடீர் முக்கியத்துவம்

மூங்கிலுக்கான சந்தை இந்தியாவில் இருப்பது உண்மைதான். பட்ஜெட்டில் மூங்கிலுக்கு ஏன் முக்கியத்துவம் எனப் பார்த்தால், இந்தியாவில் மூங்கில் விளையும் மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் பா.ஜ.க ஆட்சியில் இல்லை. மேலும் அவற்றில் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. 

12) ரயில்வே பட்ஜெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது!

உள்கட்டமைப்புக்குப் பெரிதாக முதலீடுகள் அறிவிக்கப்படவில்லை என்பது ஒருபக்கம் எனில், மறுபக்கம் ரயில்வே துறைக்கான முக்கியத்துவம் முற்றிலும் குறைந்துவிட்டது. ரயில்வேவுக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் நடத்திவந்த நிலையில் அதை பொது பட்ஜெட்டோடு இணைத்தபிறகு அதன் முக்கியத்துவம் குறைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காகப் பெரிய அளவில் எந்தத் திட்டமும் இல்லை என்பது ஏமாற்றமே.

13) விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் என்பது கண்துடைப்பே

விவசாயத் துறைக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, விவசாயிகளுக்குச் செய்யவேண்டியவை எவை என்பதெல்லாம் காலங்காலமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பட்ஜெட் தாக்கலில், விவசாயத்துக்காக பல அறிவிப்புகள் இருந்தன. ஆனால், அவற்றில் எதுவும் நடந்ததுபோல் தெரியவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதிலும் அரசு தயாராக இல்லை. விவசாயிகளின் உயிரிழப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வேளாண்பொருள்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதாக அருண் ஜெட்லி கூறினார். அப்படியெனில், விலைவாசி ஏன் குறையவில்லை?

விவசாயத் துறைக்கு உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது. கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்த 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. சிறு, குறு தொழில்கள் எல்லாம் பெரும்பாலும் நசிந்துவருகின்றன. விவசாயமும் இல்லை. எல்லோரும் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்துவருகிறார்கள். விவசாய நிலங்கள் விலைநிலங்களாகி வருகின்றன. அங்கே என்ன இருக்கிறது, எதை வைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்? ஆனாலும், இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கானது என்ற பிம்பம் வலுவாகக் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. 

14) தன்னைத்தானே புகழ்ந்துகொண்ட அரசு

பா.ஜ.க தலைமையிலான இந்த ஆட்சியில் நடந்த பல்வேறு நடவடிக்கைகள் மக்களை நேரடியாக பாதித்தவை என்பது எல்லோருமே அறிந்த விஷயம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் குறிப்பிடாமல், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் முயலாமல், அரசின் புகழ்... முக்கியமாக மோடியின் புகழ் பாடப்பட்ட பட்ஜெட்டாகவே இருந்தது. `இந்தியா வேகமாக வளர்கிறது, ஏழாவது பெரிய பொருளாதார நாடு, விரைவில் ஐந்தாவது இடம். இவை அனைத்துக்கும் காரணம் மோடி' என்றும், பா.ஜ.க ஆட்சியில் நேர்மையான வெளிப்படையான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், வளங்கள் நேர்மையாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், பற்றாக்குறையைக் குறைத்திருப்பதாகவும் அருண் ஜெட்லி பெருமைபட்டுக்கொண்டார். 

பணவீக்கம் உயர்ந்துகொண்டேபோவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாதது பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. கடந்த பட்ஜெட்டில் அள்ளி வீசிய அறிவிப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதையும் குறிப்பிடவில்லை. அரசு முன்னெடுத்த பல்வேறு திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன. `ஸ்கில் இந்தியா' மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் எத்தனை பேர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர், முத்ரா கடன் திட்டம் மூலம் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை என்ன, ஏன் முத்ரா கடன் பெருமளவில் வாராக் கடன் ஆகிறது போன்ற விவரங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

15) பட்ஜெட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதே பா.ஜ.க-வின் வெற்றி

இந்த பட்ஜெட்டில் அது இல்லை, இது இல்லை என்று நாம் சொல்லிக்கொண்டாலும், அரசு தெளிவாகவே காய் நகர்த்தியிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் யாரையும் பாதிக்கும்வண்ணம் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. அதேநேரம் நிதி ஒதுக்கீடுகளை வாரி வழங்கிவிடவும் இல்லை. அறிவிப்புகளை அள்ளி விட்டுவிட்டு, பிறகு அதற்கான விமர்சனங்களைச் சந்திக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகக் கூடாது என்பதில் அரசு மிகக் கவனமாகச் செயல்பட்டிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement