வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (02/02/2018)

கடைசி தொடர்பு:14:31 (02/02/2018)

'கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை!' - ரயிலில் நடிகை சனுஷாவுக்கு நேர்ந்த துயரம்

தமிழில் ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சனுஷா. மலையாளத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான `கொடிவீரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் ஓடும் ரயிலில் நடிகை சனுஷாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சனுஷா கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாவாலி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் தன்னை யாரோ தொடுவதுபோல் உணரவே உடனடியாக எழுந்துள்ளார். அருகிலிருந்தவர் தன்னை மானபங்கம் செய்ய முயல்வதை அறிந்த சனுஷா, உடனே அவரைத் தடுத்து கூச்சலிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அதே பெட்டியில் தன்னுடன் பயணம் செய்த எழுத்தாளர் உன்னி மற்றும் ரஞ்சித் என்பவர் உதவியுடன் அந்த நபரை டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.

பின்பு திருச்சூர் ரயில் நிலைய போலீஸாரிடம் சனுஷா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சனுஷாவை மானபங்க முயன்ற நபர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் ஆண்டோ போஸ் என்பதும் தெரியவந்தது. இது போன்ற நபர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே புகார் அளித்ததாக சனுஷா தெரிவித்தார். முன்னதாக, தான் கூச்சலிட்டும் அருகிலிருந்தவர்கள் யாரும் தனக்கு உதவிக்கு வரவில்லை என்றும், சம்பவத்தைப் பார்த்த அருகிலிருந்த பயணிகள் தூங்குவதுபோல் நடித்து தன்னைக் காப்பாற்ற வரவில்லை என நடிகை சனுஷா தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க