பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் சக மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
சாய் தீப்தி
ஹைதராபாத் மாநிலம் மல்கஜ்கிரி பகுதியில் வசித்து வருபவர் பாலகிஷன். இவர் பெயின்டராக வேலை செய்பவர். இவரின் மனைவி சுனிதா அருகில் இருக்கும் கடையில் விற்பனையாளராக வேலை செய்கிறார். இந்தத் தம்பதி ஏழ்மையான நிலையிலும் தன் இரு மகள்களைத் தனியார் பள்ளி, கல்லூரியில் படிக்க வைத்தனர். இவர்கள் மூத்த மகள் சாய் லலிதா பி.டெக் படித்து வருகிறார். இளைய மகள் சாய் தீப்தி 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சாய் தீப்தி நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
சாய் தீப்தி தற்கொலை குறித்து அவரின் தந்தை கூறுகையில் ‘என் மகள் படிக்கும் பள்ளியில் ரூ.2,000 கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. அடுத்த வாரம் கட்டணம் செலுத்திவிடுகிறேன் என்று ஆசிரியர்களிடம் அனுமதி கேட்டிருந்தேன். அவர்களும் என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். ஆனால், நேற்று என் மகள் ஸ்கூல் ஃபீஸ் கட்டவில்லை என்று யூனிட் டெஸ்ட் எழுத அனுமதிக்கப்படவில்லை.
மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த என் மகள் வீட்டுக்கு வந்ததும் என் மூத்த மகளிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். நாங்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கடிதம் எழுதி வைத்துவிட்டு மின் விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். என் மகளைத் திட்டியதற்குப் பதில் எனக்கு செல்போனில் தொடர்புகொண்டு உடனே கட்டணம் செலுத்துங்கள் என்று சொல்லியிருந்தாள் எப்படியாவது கடன் வாங்கி கட்டணத்தைச் செலுத்தியிருப்பேன்’ என்று கதறியிருக்கிறார்.
தீப்தி எழுதி வைத்த கடிதத்தில் `ஸ்கூல் ஃபீஸ் கட்டவில்லை என்று சக மாணவர்கள் முன்னிலையில் என்னை ஆசிரியர் அவமானப்படுத்தினார். தேர்வு எழுதவும் அனுமதிக்கவில்லை. மன்னித்துவிடு அம்மா... நான் சாகப்போகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தைப் படித்து மாணவியின் தாயார் கண்ணீர்விட்டார்.
தீப்தி தற்கொலை தொடர்பாகப் பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் அலுவலர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை (தடுப்பு) சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
