பெற்றோரைக் கைவிட்டால் சம்பளம் 'கட்' அஸ்ஸாம் சட்டம் என்ன சொல்கிறது? | Assam Assembly passes bill to ensure govt staff take care of parents

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/02/2018)

கடைசி தொடர்பு:21:00 (02/02/2018)

பெற்றோரைக் கைவிட்டால் சம்பளம் 'கட்' அஸ்ஸாம் சட்டம் என்ன சொல்கிறது?

மீபத்தில், சென்னையில் ஓர் இளைஞர் முதியவர் ஒருவரை 'கோயிலுக்கு சாமி கும்பிடப் போவோம் ' என்று கூறி, மோட்டார் சைக்கிளில் அழைத்துவந்தார். முதியவர் வேறு யாருமில்லை... அந்த இளைஞரின் தந்தைதான். கோயில் அருகே முதியவரை விட்டுவிட்டு, 'இந்தா வந்துடுறேன்' என்று கூறிச்சென்ற இளைஞர், திரும்பி வரவேயில்லை. மகன் வருவான் என கோயில் வளாகத்தில் காத்திருந்த தந்தைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பசியால் வாடி, அரைகுறை மயக்கத்தில்கிடந்த அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீட்டார். தந்தையை நடுரோட்டில் கைவிட்டுச் சென்ற மகன்மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனாலும், நடைமுறையில் சாத்தியமில்லை.

முதியவர்களை காக்க அசாம் அரசு இயற்றிய சட்டம்

ராமநாதபுரத்தில், நேற்று அநாதையாக இறந்துகிடந்த  முதியவர் ஒருவர், தன் இறுதிச்சடங்குச் செலவுக்காக ரூ.300 வைத்திருப்பதாகக் கடிதம் எழுதி வைத்திருந்தது, கண்டவர்களை உருக்கியது. பிள்ளைகள் கவனிக்காததால், வயதான காலத்தில் பெற்றோர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பெற்றோர் எழுதும்  கடைசிக் கடிதங்கள்,  'மகன்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை' என்றே காரணம் சொல்கின்றன. 

முதியவர்கள், அநாதரவாகத் தள்ளப்பட, காரணம் எதுவாக இருந்தாலும் தண்டனைக்குரியதுதான். முதியவர்களைக் கவனிக்காமல் விடும் பிள்ளைகளுக்குப் பாடம் புகட்டும் வகையில் அஸ்ஸாம் அரசு, கடந்த ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி, அரசு ஊழியர்களின் பெற்றோர்,  மகன் மீது  புகார் அளித்தால், சம்பளத்தில் 10 -15 சதவிகிதம் 'கட்'டாகிவிடும். பிடித்தம்செய்யப்படும் பணம், பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். முதியவர்களைத் தவிக்கவிடக் கூடாது என்பதற்காக, அஸ்ஸாம் அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய சட்டம் அமலில் உள்ள ஒரே மாநிலம், அஸ்ஸாம்தான்.

தமிழகத்தில், சில தனியார் நிறுவனங்களில் பெற்றோரின் வங்கிக் கணக்கும் வாங்கிவைத்திருப்பதாகவும் ஊழியர்கள்மீது பெற்றோர் குறை கூறினால், பெற்றோர் வங்கிக் கணக்கில் சம்பளப்பணம் செலுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில், முதியவர்களைக் கைவிடும் போக்கு அதிகரித்திருப்பதால், அஸ்ஸாம் மாநிலத்தில் இயற்றப்பட்டது போன்ற சட்டம் தேவை என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில், முதியவர்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்பட வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க