வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (02/02/2018)

கடைசி தொடர்பு:20:56 (02/02/2018)

’காலநிலை மாற்றம் என்கிற சொல்லே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை!’ - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

அருண் ஜெட்லி

காலநிலை மாற்றம் என்கிற வார்த்தையே பாரதிய ஜனதா கட்சியின் முழு அளவிலான கடைசி நிதிநிலை அறிக்கையில் இல்லை;  சூழலியல் பார்வையில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறியிருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

 அமைப்பைச் சேர்ந்தவர்கள் முகநூலில் இன்று பதிவு செய்துள்ள அறிக்கையில், ”ஒன்றிய அரசின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை இந்திய விவசாயத்தின் சில பகுதிகளை தொட்டாலும், இந்திய விவசாயிகளின் துயரத்தை துடைக்க எந்தவிதமான உருப்படியான திட்டத்தையும் அறிவிக்கவில்லை. நேற்றைய அறிக்கையில் அருண் ஜெய்ட்லி  சொல்ல மறந்த முக்கியமானதொரு வார்த்தை "காலநிலை மாற்றம்".

பூவுலகின் நண்பர்கள்காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகள் இல்லாதது மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அதுவும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் விவசாயம் 25 சதவிகிதத்திற்கும் மேல் இழப்புகளை சந்திக்கும் என்கிற சமீபத்திய ஆய்வுகள் வந்துள்ள நிலையில் அந்த வார்த்தை கூட இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சந்தித்து வரும் "காலநிலை நிகழ்வுகள்" (climate events) குறிப்பாக பருவம் தப்பிய மழை, வறட்சி, புயல்கள், வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் அதுகுறித்த பார்வை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது வருத்தத்திற்குரியது. இந்தியாவின் விவசாயம் காலநிலை மாற்றத்தால் பெரிய பாதிப்புகளை சந்திக்கும் என சமீபத்தில் வெளியான "பொருளாதார ஆய்வு அறிக்கை" (economic survey) தெளிவாக அறிவித்த பிறகும் காலநிலை மாற்றம் அதிக கவனம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. மேலும் அந்த ஆய்வு அறிக்கையில், 1970 ஆம் ஆண்டிற்கும் கடந்த பத்தாண்டிற்குள்ளும் பெய்த மழையின் அளவு சராசரியாக 86மில்லிமீட்டர் குறைந்து வருவதாகவும் அதே காலகட்டத்தில் வெப்பத்தின் அளவு 0.45 முதல் 0.63 டிகிரி அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. திடீர் பருவ மாற்றங்களால் கோடை கால (kharif) பயிர்களின் உற்பத்தி 7 சதவீதமும், குளிர்கால பயிர் விளைச்சல் (rabi) 7.6 சதவீதம்  குறைந்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வு அறிக்கை தெளிவாக எடுத்து வைக்கிறது. காலநிலை மாற்றத்தால் விவசாயத்தில் வரும்  சராசரி ஆண்டு வருமானம் 25% குறையும் என்றும், தற்போது அது 78,000 ரூபாயாக இருப்பதாகவும் உள்ளது.

நிதிநிலை அறிக்கையில் "விவசாய கடன்" முழுமையாக ரத்து செய்யப்படவேண்டும் என்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாக, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக, காலநிலை மாற்றத்தை தாங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் உட்பட அனைத்தும் இருக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களும் செயல்பட்டாளர்களும் கோரிக்கை விடுத்தது இருந்தனர். நிலம் "பாலைவனமாதல்" என்பது நம் நாட்டின் உணவு உற்பத்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், நம் நாட்டின் 328.72 மில்லியன் ஹெக்டர் ((MHA) நிலப்பரப்பில், 96.4 மில்லியன் ஹெக்டர் காலநிலை மாற்றத்தால் பாலையாகிக்கொண்டிருப்பதாகவும் அதாவது இந்தியாவின் 30% நிலப்பரப்பு அதன் தன்மை இழந்து பாலையாகிக்கொண்டிருப்பதாக டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலுக்கான மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த பின்னணியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான எந்த திட்டமும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது இன்னமும் நம் நாடு புவிவெப்பமயமாதலையும் காலநிலை மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லையோ என்ற எண்ணத்தை விதைக்கிறது.

நிதிநிலை அறிக்கையில் சில குறிப்பிடத்தக்க அம்சங்களும் உள்ளன. அடிப்படையில் காய்கறி உற்பத்திக்கு அழுத்தம் கொடுக்கிறது, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறி பயிர்களுக்கும், மருத்துவ மற்றும் வாசனை திரவங்கள் தயாரிக்க உதவும் மூலிகைகளுக்கும் அதிக சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த காய்கறிகளை விளைவிக்கும் விவசாய உற்பத்தி நிறுவனங்களை (farmer producer organisations) ஒருங்கிணைக்க அறிவித்துள்ள "பசுமை நடவடிக்கை" (operation green) குறிப்பிடத்தகுந்த அறிவிப்பு, அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புக்குள்ளாகும் பருப்பு வகைகளும் கோடைகால பயிர்களும் இந்த பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த அரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த முக்கியமான நடவடிக்கை, விவசாயிகள் தங்களின் உற்பத்தி செலவைவிட அதிகமாக 50%வருமானம் வரும் வகையில் "குறைந்தபட்ச கொள்முதல் விலை" (minimum support price) அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குறிப்பிடும் வகையில் எந்த அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதற்கான திட்டங்களை "நிதி ஆயோக்" மற்றும் மாநில அரசுகள் தயாரிக்கும் என்று அறிவித்திருக்கிறது நிதிநிலை அறிக்கை.

சிறு மற்றும் குறு விவசாயிகள் குறித்த இரண்டு அறிவிப்புகளை தவிர வேர் எதுவுமில்லை, நாட்டில் உள்ள 22,000 கிராமப்புற சந்தைகளை "கிராம விவசாய சந்தையாக" மேம்படுத்தி தரம் உயர்த்த 2,000 கோடிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தவிர வெறும் எதுவும் இல்லை. இத்தனைக்கும் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது சிறு மற்றும் குறு விவசாயிகளே.

இந்தியாவில் பாசன வசதி இல்லாத நிலப்பரப்பே அதிக இழப்புகளை சந்திக்கிறது, மொத்தமுள்ள விவசாய நிலப்பரப்பில் 45% மட்டுமே பாசன வசதி கொண்டதாக உள்ளது, அதை விரிவாக்க பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, அறிவிக்கப்பட்டுள்ள "Pradhan Mantri Krishi Sinchayee Yojana" 15லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. நிலத்தடி நீர் வள ஆதாரங்களை பெருக்குவதற்கு என்று திட்டங்களையும் அறிவிக்காமல் நிலத்தடி நீர்ப்பாசன திட்டத்திற்கென 2,600 கோடி ஒதுக்கிருப்பது பிரச்சனைகளை தீர்க்காது. காலநிலை மாற்றம் நிலத்தடி நீரை வற்றச்செய்யும் என்கிற பின்னணியில் இதனை பொருத்தி பார்க்கவேண்டும். இந்திய விவசாயத்திற்கு முக்கியமாக விளங்கப்போகும் சொட்டுநீர் பாசனம், நீர் தெளிப்பான்கள், நீர் மேலாண்மை குறித்த எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

இந்தியாவின் கடற்கரை நீளம் 7,500 கிலோமீட்டர், கடல் மட்டம் உயர்வதால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடல் மட்டம் உயர்வதாலும், விவசாயம் பொய்ப்பதாலும் உள்நாட்டு காலநிலை அகதிகளின் (climate refugees) அதிகரிக்கும் என்றும் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதை எதிர்கொள்வதற்கான எந்த திட்ட அறிவிப்பு நிதி நிலை அறிக்கையில் இல்லை.

புதிப்பிக்கக்கூடிய ஆற்றல் துறையில் எந்தவிதமான முக்கியமான அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. வரும் 2022 ஆண்டிற்குள் 1,75,000மெ.வா. மின்சாரத்தை புதிப்பிக்கக்கூடிய ஆற்றல்களை பயன்படுத்தி மின்னுற்பத்தி நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் அதற்கான எந்த திட்டத்தையும் அறிவிக்காதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. உலக நாடுகளிடையே ஏற்பட்ட "பாரிஸ் ஒப்பந்தத்தை" இந்திய ஏற்றுக்கொண்டு வெப்ப அளவை 1.5 டிகிரிக்கும் குறைவாக வைக்க  "கார்பன்" வெளியீட்டை குறைப்பது என்ற அறிவிப்பை செய்தது, ஆனால் புதிப்பிக்கக்கூடிய ஆற்றல்களில் கவனம் செலுத்தாதது நம்மால் சர்வதேச ஒப்பந்தத்தை கடைபுடிக்கமுடியுமா என்பது கேள்வி.      

மொத்தத்தில் சூழலியல் பார்வையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது”,என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்