'சோலைக்காட்டுப் புல்வெளி!' - தென் இந்திய நதிகளின் தாய் #savegrasslands | Save Grasslands in Western Ghats

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (03/02/2018)

கடைசி தொடர்பு:12:10 (03/02/2018)

'சோலைக்காட்டுப் புல்வெளி!' - தென் இந்திய நதிகளின் தாய் #savegrasslands

grass land

யிரக்கணக்கான வருடங்களுக்கு முன் உருவான மேற்குத்தொடர்ச்சி மலை, இமயமலையைவிட மூத்தது என்கிற கருத்தும் உண்டு. தென்னிந்தியாவின் தண்ணீர்த் தொட்டியே இந்த மலைதான். மலையில் மழை பெய்து, நதியாக ஊற்றெடுத்து வருகிறது என்று நாம் கருதுகிறோம். மழை பெய்தால் மட்டும் நதியாக உருவெடுத்துவிடுமா என்று நினைத்தால் அது தவறு. மேற்குத்தொடர்ச்சி மலையை சாதாரணமாகப் பார்த்தால், நமக்கு மலையும் மரங்களும்தான் தெரியும். 

அக்காமலை

இந்த மலைமீது 6 ஆயிரம் அடி உயரம் வரை ஏறினால், மரங்கள் காணப்படாது. வெறுமனே புல்வெளிகள் மட்டுமே படர்ந்து காணப்படும். இதை, ஆங்கிலத்தில் 'grass land' என்று சொல்வார்கள். இந்தப் புல், சுமார் ஓரடி உயரத்துக்கு வளர்ந்து காணப்படும். மலை உச்சியில் மழை பெய்தால், தண்ணீர் கீழ்நோக்கி ஓடிவருவதுதானே இயல்பு. ஆனால், இங்கே மழை பெய்தால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கீழே ஓடி வராது. மழை நீரை இந்தப் புல்வெளிகள் கிரகித்துக்கொள்ளும். பின்னர், படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடும்.

மேற்கு தொடர்ச்சி மலை

இந்தப் புல்வெளிகளையொட்டி சோலைக்காடுகள்  (shola forest) காணப்படும். இந்த சோலை மரங்கள்தான், மேற்குத்தொடர்ச்சி மலையின் தனிச்சிறப்பு. சோலை மரங்கள் என்பதில் இருந்துதான், ஆங்கில வார்த்தையான shola forest உருவானது. சோலை மரங்கள் அதிக உயரமாக வளராது. குட்டையாகப் படர்ந்து காணப்படும். அதிக தண்ணீரையும் குடிக்காது. புல்வெளியில் இருந்து உருவாகும் தண்ணீர், சோலை மரக் காடுகளில் போய் தேங்கும். அதுபோல, பாறை இடுக்குகளிலும் நீரூற்றாகப் பிரவாகமெடுக்கும். பின்னர் ஓடையாக, சிற்றாராக, நதியாக நாட்டுக்குள் ஓடிவருகின்றன.

அவலாஞ்சி

காவிரி, கோதாவரி, அமராவதி, கிருஷ்ணா, தாமிரபரணி என அத்தனை நதிகளுக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைதான் தாய். இந்த நதிகள் உருவாக முக்கிய காரணகர்த்தாவாக இப்போதும் எஞ்சியிருக்கிறது, இந்தப் புல்வெளிகள். தாவர இனங்களிலேயே இந்தப் புல்தான் மிக மூத்தது. மேற்குத்தொடர்சி மலை முழுவதும் பரவிக் கிடந்த இத்தகைய புல்வெளிகளையும் சோலைக் காடுகளையும் அழித்துவிட்டுதான் ஆங்கிலேயர்கள்  தண்ணீர் அதிகம் குடிக்கும் யூகலிப்டஸ் மரங்களை நட்டனர். விளைவு? சோலை மரங்கள் அரிதாகிப்போயின. இப்போதும் தமிழகத்தில் வால்பாறை அக்காமலை, உதகை அவலாஞ்சி, கோவை வெள்ளியங்கிரி மலைகளில், புல்வெளிகளும் சோலை மரங்களும் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு, அனுமதி இல்லாமல் மனிதர்கள் செல்ல முடியாது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க