'லஞ்சம்தான் இவருக்கு முழுநேர வேலை'- ஜி.எஸ்.டி கமிஷனர் சுற்றிவளைக்கப்பட்ட பின்னணி

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக, மத்திய ஜிஎஸ்டி ஆணையரைக் கைதுசெய்து அதிரடிகாட்டியுள்ளது, சிபிஐ.

gst commisioner
 

மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையரான சன்சார் சந்த், கான்பூர் ஜிஎஸ்டி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர், லஞ்சம் வாங்குவதையே தொழிலாக வைத்திருப்பதாக சிபிஐ-க்குக் கிடைத்த தகவலை அடுத்து, சந்தேகத்தின் பேரில் கடந்த ஆறு மாதங்களாக சிபிஐ அவரைக் கண்காணித்துவந்தது. கான்பூர் மற்றும் டெல்லி முழுவதும் உள்ள அவரின் நண்பர்கள், உறவினர்களைத் தீவிரமாகக் கண்காணித்துவந்தது. பெரும் புள்ளிகளிடமிருந்து சன்சார் சந்த் அதிக அளவிலான லஞ்சம் வாங்குவதை சிபிஐ கண்டுபிடித்தது.

சன்சாரின் பின்னணியில், ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டுவந்ததையும் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. வருவாய்த் துறையில் பணிபுரியும் மூன்று அதிகாரிகள், இடைத்தரகர்கள் மூலமாக பெரும் புள்ளிகளைத் தொடர்புகொள்வார்கள். பெரும்பாலும் தொழிலதிபர்கள்தான் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்கள். சன்சார், பணமாக மட்டும் லஞ்சம் பெறுவது கிடையாது. டிவி, மொபைல் போன், ஏசி போன்று பொருள்களாகவும் லஞ்சம் பெற்றுக்கொள்வார். இவருக்கு உறுதுணையாக,  இவரின் மனைவி செயல்பட்டுள்ளார். கான்பூரில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், சன்சாருக்கு லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி கட்டாமல் தப்பித்துக்கொள்வார்களாம். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், நேற்று (2-2-2018)  இரவு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது, சன்சார் சந்த்தை கையும் களவுமாக சிபிஐ கைதுசெய்தது. சன்சார் சந்த்தின் மனைவி, மூன்று இடைத்தரகர்கள், சன்சார் சந்த்தின் கீழ் பணிபுரியும் மூன்று அதிகாரிகள் உட்பட, 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சன்சார் சந்த், 1986-ம் பேட்சில், இந்திய வருவாய்த் துறையில் (IRS) பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!