காதலனைக் கொல்ல ஒன்றுசேர்ந்த காதலியின் குடும்பம்! - டெல்லியை அதிர வைத்த ஆணவக்கொலை

மன்னார்குடி அருகே காதலித்துத் திருமணம் செய்தவர்களை ஆணவக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள்தண்டனை விதித்து தஞ்சைக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமோர் ஆணவக் கொலை  அரங்கேறியுள்ளது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் அல்ல, தலைநகர் டெல்லியில். 

ஆம், தலைநகர் டெல்லியில்தான் 23 வயது இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் அங்கித் சக்சேனா. 23 வயதாகும் இவர், டெல்லி ரகுவீர் நகர் அருகே வசித்து வருகிறார். இவரும் அதேப் பகுதியில் உள்ள மாற்றுச் சமூகத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை தாகூர் கார்டன் மெட்ரோ நிலையம் அருகே காத்திருக்கும் தன் காதலியைச் சந்திப்பதற்காக அங்கு சக்சேனா சென்றபோது, அப்பெண்ணின் தந்தை, தாய், தம்பி மற்றும் அவரது உறவினர் ஆகியோர் அவரை வழிமறித்து தாக்கத் தொடங்கினர். இதில் பெண்ணின் தந்தை, தொடர்ந்து அங்கித் சக்சேனாவின் தொண்டை மற்றும் இடுப்புப் பகுதியில் கத்தியால் தாக்கியுள்ளார். 

இதை தடுக்க வந்த அங்கித்தின் தாயையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அங்கித் உயிரிழக்கவே, அவரின் தாய் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், புகாரின் அடிப்படையில் அப்பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர். மேலும் பெண்ணின் தம்பி மைனர் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பரபரப்பான ரகுவீர் நகரில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!