’’காங்கிரஸின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது!’’ - பெங்களூரு மாநாட்டில் மோடி சூளுரை

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி பேசினார். 

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் பா.ஜ.க, பெங்களூருவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் வகையில் மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘’கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதை உங்களின் அபிமானம் எனக்குக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இனியும் கர்நாடகா ஏற்காது. மாநிலத்திற்கு மத்திய அரசு அளிக்கும் நிதிச் சரியாகப் பயன்படுத்துவதை நீங்கள் கண்டதுண்டா?. மத்திய அரசின் நிதி மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களின் பயன்கள் முறையாக மக்களைச் சென்றடைகிறதா?’’ என்று கேள்வியெழுப்பினார். 
கர்நாடக விவசாயிகள் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட மோடி, ’’விவசாயிகளுக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன் என்ற பொருளில் 'Farmers are my TOP priority' என்றார். ''TOP'' என்ற வார்த்தையில் T என்பது தக்காளியையும் (Tomatto), O என்பது வெங்காயத்தையும் (Onion) மற்றும் P என்பது உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்று பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!