வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (05/02/2018)

கடைசி தொடர்பு:12:40 (05/02/2018)

திருமண உறவில் மூன்றாவது நபர்கள் தலையிடுவது சட்டவிரோதம்..! உச்ச நீதிமன்றம் கருத்து

'கட்டப்பஞ்சாயத்துமூலம் திருமணத்தைப் பிரித்துவைப்பது சட்டவிரோதம்' என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 

திருமண உறவில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதுகுறித்து' 'சக்தி வாஹினி' என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த மனுவில், 'சட்டப்படியான அங்கிகாரம்பெற்ற திருமண உறவுகளில்கூட மூன்றாவது நபர்கள் தலையிட்டு பிரித்துவைக்கும் சூழல் உள்ளது. இதைத் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சட்ட ரீதியாகப் பதிவுசெய்யப்பட்ட திருமணங்கள், சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்றவை. அந்தத் திருமண உறவில் மூன்றாவது நபர்கள் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்துமூலம் திருமணத்தைப் பிரித்துவைப்பது சட்டவிரோதம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகவே கௌரவக் கொலைகளும் அதிகமாக நடக்கின்றன' என்று கருத்துதெரிவித்துள்ளனர்.