வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (05/02/2018)

கடைசி தொடர்பு:16:04 (05/02/2018)

“மோடி மிகவும் நல்ல மனிதர்; தமிழ்நாடு இல்லம் பெயர் மாற்றத்தில் அரசியல் இல்லை!” - அ.தி.மு.க-வின் 'அடடே’ பதில்

தமிழ்நாடு

மொழிவாரி மாகாண அடிப்படையில், சென்னை மாகாணத்துக்குத் ’தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக்கோரி சங்கரலிங்கனார் உண்ணவிரதமிருந்து உயிர்விட்டதன் 62 - ம் ஆண்டு இது! 

சங்கரலிங்கனார் உயிர் துறந்து 13 வருடங்கள் கழித்து அப்போதைய தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் முயற்சியால், மெட்ராஸ் மாகாணமானது ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த வகையில், 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டி 50 - ம் ஆண்டு பொன்விழாவையும் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். 

டெல்லியில், கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்காக ‘தமிழ்நாடு இல்லம்’ கட்டப்பட்டது. அதன் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில், புதிதாக மற்றொரு 'தமிழ்நாடு இல்ல'மும் கட்டப்பட்டது.

'தமிழ்நாடு' பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழா ஆண்டின் தொடக்கம் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில்தான் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் ‘வைகைத் தமிழ் இல்லம்’, 'பொதிகைத் தமிழ் இல்லம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் பின்னணியில் சில விவகாரங்கள் பேசப்படுகின்றன. அதாவது, டெல்லியில் இந்த இல்லம் இருக்கும் இடம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. அதனால், ‘தமிழ்நாடு’ என்று இருக்கும் இல்லத்துக்கான பெயரை ‘தமிழ் பவன்’ அல்லது ‘தமிழ் நிவாஸ்’ என்பது போல மாற்றுவதற்கு மத்திய அரசுத் தரப்பில் முயற்சி செய்துள்ளனர் என்றும், ஆனால் தமிழக அரசுத் தரப்பு முந்திக்கொண்டு 'தமிழ் இல்லம்’ என்கிற பெயரைச் சூட்டியுள்ளனர்

என்றும் சொல்கிறார்கள். தமிழ் நாடு என்கிற பெயரே இருக்கக் கூடாது என்கிற வகையில் பி.ஜே.பி செயல்பட ஆரம்பித்துள்ளது. அடுத்து, 'தமிழ் நாடு' என்ற மாநிலப் பெயரையும் மாற்றுவதற்கான வேலைகள் நடக்கும் என்று, பல தரப்பிலிருந்து ஆட்சேபக் குரல்கள் எழுகின்றன.நவநீதகிருஷ்ணன்

இதற்கு விளக்கமளித்துள்ள அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், "பழைய தமிழ்நாடு இல்லம், புதிய தமிழ்நாடு இல்லம் என்றுதான் இதுவரை அடையாளத்துக்காக அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், டெல்லிக்கு அலுவலாகச் செல்லும் தமிழகப் பிரதிநிதிகளுக்கு 'பழைய’ தமிழ்நாடு இல்லம் என்கிற பெயர் ஒருவகையில் உறுத்தலாக இருந்தது. அதன் காரணமாகவே தற்போது வைகை,பொதிகை என அழகான தமிழ்ப்பெயர்களைக் கொண்டு 'தமிழ் இல்லம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவருக்கோ அல்லது ஆளும் பி.ஜே.பி அரசுக்கோ இல்லை. கூட்டத்தொடரில் என்னைச் சந்தித்தபோது கூட ‘வணக்கம் சார்!’ என்று தமிழில்தான் வரவேற்றார். இங்கேயிருக்கும் சிலர்தான் இதுபோன்ற தேவையற்ற தகவல்களைப் பரப்பிவருகிறார்கள்” என்றார். 

தமிழிசைபெயர் மாற்றம் குறித்து தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், “அதில் ஒன்றும் தவறிருப்பதாகத் தெரியவில்லையே...” என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். 

இந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் இருக்கும் இயக்கங்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள 'மே பதினேழு' இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைத் தொடர்புகொண்டோம். “தமிழ், தமிழ்நாடு, தமிழர் என்கிற சொல்லாடலே இருக்கக் கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ்-ஸின் விருப்பமாகவும், அதற்குத் துணைபோகும் பி.ஜே.பி-யின் எண்ணமாகவும் இருக்கிறது. சங்கரலிங்கனார் போன்றவர்களின் வரலாறு தெரியாமல் இருக்கும் தற்போதைய ஜனநாயக முறையற்ற அரசு, பி.ஜே.பி-யினர் சொல்வதையே கேட்டு செயல்பட்டுவருகிறது. பெயரை மாற்றும் உரிமை இந்த மெஜாரிட்டி இல்லாத அரசுக்கு இல்லை. இப்படியான சூழல் நீடித்தால், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் டெபாசிட்கூட இல்லாமல் அ.தி.மு.க தோல்வியடையும். மக்களுக்கு முக்கியத் தேவை எதுவோ அதை முன்னிலைப்படுத்திச் செய்வதை விடுத்து பண்பாட்டுச் சிக்கலை ஏற்படுத்தும் செயல்களுக்குத் துணை நின்றால், மக்கள் நிச்சயம் களப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்