``பொய்களை அவிழ்த்துவிடுகிறார் பிரதமர் மோடி'' - சித்தராமையா காட்டம்!

224 தொகுதிகளுக்கான கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநிலம் முழுவதும் பரிவர்த்தன் யாத்திரை மேற்கொண்டார். இதன் நிறைவு விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இனியும் கர்நாடகா ஏற்காது என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார். 

தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். அதில், " நாட்டின் பிரதமராக இருப்பவரின் வார்த்தை நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இங்கு பொய்களைக் கூறிவருகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும்போது ஆதாரங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும். பொய்களைப் பேசியதன் மூலம் கன்னடர்களைப் பிரதமர் காயப்படுத்திவிட்டார். லோகபால் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு உரிமை கிடையாது. பிரதமர் ஊழலுக்கு வழிவகுக்கிறார். மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறித்து பிரதமர் பேசியுள்ளார். முதலில் அந்த நிதி எங்கிருந்து வருகிறது என்பதை மோடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கொலை வழக்கில் சிக்கியிருந்தார். அதேபோல், இங்கு சிறையில் இருந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோத்ரா கலவரமே அதற்கு உதாரணம். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் முன்பு, முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகா 11வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 2 வருடத்தை முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. இதை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!