வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (05/02/2018)

கடைசி தொடர்பு:20:38 (05/02/2018)

``இந்திய விவசாயமும் இஸ்ரேலுக்கு இணையாக வளரும்!’’ - `டைகூன் அட்வைஸர்ஸ்’ சத்தியகுமார்

பட்ஜெட்

பட்ஜெட் 2018 சாதகமா, பாதகமா? என்ற தலைப்பில் நாணயம் விகடன் சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் `டைகூன் அட்வைஸர்ஸ்’ நிறுவனர் சத்தியகுமார் பேசினார். அவரது பேச்சில், மத்திய அரசு அறிவித்துள்ள விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

டெல்லிவரை சென்று போராடிய தமிழக விவசாயிகளின் குரல் பிரதமருக்கு எட்டவில்லையோ எனப் பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால், அவர்களின் குரல் பிரதமரை எட்டியுள்ளதால்தான் தற்போதைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாகவே பல்வேறு விவசாயம் சார்ந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஏன் இந்த பட்ஜெட்டை பொதுவாக அக்ரிகல்சர் பட்ஜெட் என்று சொல்கிறார்கள்? இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக கிராமப்புற மேம்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் ரூ.14.34 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதே அரசின் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை அடைய வேண்டுமென்றால் விவசாயக்கட்டமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். உற்பத்தித்துறையிலும், ஐடி துறையிலும் இருப்பதுபோல விவசாயத்துறையையும் ஒரு தொழில்துறையாக உருவாக்க வேண்டும். விவசாய உற்பத்தியோடு இத்துறை முடிந்துவிடுவதில்லை. விளைபொருள்களை நல்லவிலைக்கு விற்பனைக்குக் கொண்டுவந்து, அந்த விற்பனையின் லாபத்தையும் விவசாயிக்கு எட்டும்படி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்தான் தற்போதைய பட்ஜெட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பட்ஜெட்

நம்நாட்டில் 86% விவசாயிகள், சிறுவிவசாயிகளாக உள்ளார்கள். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்பதே பொதுவாக அனைத்து விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. நம்மிடம் உழைப்பும், அதற்கேற்ற விளைச்சலும் இருக்கிறது. ஆனால், அதற்கேற்ற விலை கிடைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு மார்க்கெட்டிங் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இந்த மார்க்கெட்டிங்கிற்குத்தான் டிஜிட்டல் இந்தியா உதவப்போகிறது. கிட்டத்தட்ட 50 கோடி மக்களின் கைகளில் தற்போது செல்பேசி இருக்கிறது. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இந்த செல்பேசியின் வாயிலாக விற்பனையை அதிகரிக்கும்பொருட்டுதான் இ-நாம் என்ற திட்டம் 2014-லேயே கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் குஜராத்தில் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. இ-காமர்ஸ் வழியாக விவசாய விளைபொருள்கள் நன்முறையில் விற்கப்படுகின்றன. 

முதலில் விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு நீர்ப்பாசனம் மிகவும் முக்கியம். நிலத்தடி நீர்ப்பாசன வசதியை அதிகரிப்பதற்காக 2,600 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் விளைச்சல் உறுதிசெய்யப்படும். அடுத்து, விவசாய விளைபொருள்களுக்கு அரசின் விலையானது கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போதைய பட்ஜெட்டில் 1.5 மடங்கு உயர்த்தியுள்ளார்கள். விளைச்சலான பொருள்களில் அதிகத்தேவையுள்ள பொருள்களும், தானியங்களும் விற்பனையாவதில் சிக்கலில்லை. ஆனால், சில காய்கறிகளும், பழங்களும் நாட்டின் ஒரு பகுதியில் மிகுதியாக உற்பத்தியாகி விற்பனைக்கு வழியின்றி வீணடிக்கப்படுவதும், நாட்டின் இன்னொரு பகுதியில் அதே பொருளுக்குத் தேவை இருப்பதுமாக உள்ளது. நமக்கு உருளைக்கிழங்கு விலை அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில், அதிக விளைச்சல் காரணமாக உருளைக்கிழங்கை கீழே கொட்டுகிறார்கள். அந்தக் காய்கறிகளை நம் ஊருக்குக் கொண்டுவர போக்குவரத்தும், குளிர்பதன அறையுமே நமக்குத் தேவையாயிருக்கிறது.

தக்காளி, கத்திரி போன்ற பொருள்கள் நாள்பட்டால் அழுகிவிடும். அதைத்தடுக்க, அக்ரோ ப்ராசஸிங், ஃபுட்பார்க் வேண்டும். தனியார் சூப்பர்மார்க்கெட் காய்கறிக்கடைகளில் காய்கறிகளை ப்ராசஸ் செய்து, குளிர்ப்பதனப்படுத்தி, தூய்மைப்படுத்தி வைத்திருப்பதால் அவற்றை நீண்டநாள்களுக்கு வியாபாரம் செய்ய முடிகிறது. இதனை கருத்தில்கொண்டே தற்போது நாடு முழுவதும், 42 மிகப்பெரிய உணவுப்பூங்காக்கள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விளைபொருள்களை விற்க, 22,000 சந்தைகள் உருவாக்கப்பட்டு, அவை இ-நாம் உடன் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். இதற்காக 2,600 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் சந்தைப்படுத்துதல் இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டு, விற்பனை வாய்ப்பு அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. அதேபோல, உணவுப் பொருள்களை நன்முறையில் பதப்படுத்திப் பாதுகாப்பதற்காக, உணவுப் பதப்படுத்தலுக்கு 11,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விளைவிக்கப்பட்ட பொருள்கள் வீணாவது தடுக்கப்படுவதோடு, இந்தியா முழுமைக்கும் உணவுப்பற்றாக்குறையும், திடீர் விலையேற்றங்களும் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

பட்ஜெட்

இந்த பட்ஜெட் அறிவிப்புகள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டால், வறுமைக்கோட்டிலிருந்து விவசாயிகளை மேலே கொண்டுவரமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சியாக இருக்க முடியும். 70% மக்கள்தொகை, கிராமப்புறங்களில் இருக்கும் இந்தியாவை மற்ற நாடுகளோடு ஒப்பிடுவதே தவறு. இவர்களில் 60% பெண்கள், தினசரி கூலித்தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இந்தப் பெண்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பாட்டையும். அதேபோல பங்குச்சந்தையிலும் உணவுப்பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை உயரக்கூடும். ரூ.3,000 கோடிகளாக உள்ள விவசாயப்பொருள்கள் ஏற்றுமதியை ரூ.10,000 கோடிகளாக உயர்த்துவதுதான் அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது.

இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு வெறுமனே மானியம் தராமல், அவர்களுக்கான சமூக முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்காக அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும் சொத்தாகும். சமீப காலமாக இஸ்ரேலுடன் உள்ள நல்லுறவு காரணமாக அவர்களது விவசாய தொழில்நுட்பங்களை இந்தியாவும் பின்பற்றத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தியாவும் இஸ்ரேலைப்போல் விவசாயத்தில் மேம்பாடடையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார் சத்தியகுமார்.


டிரெண்டிங் @ விகடன்