வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (06/02/2018)

கடைசி தொடர்பு:05:24 (07/02/2018)

இறக்குமதி கார்களுக்கான வரி உயர்வு... அதிர்ச்சியோ அதிர்ச்சி!

பட்ஜட் என்றாலே மக்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுற்றிவிடுகிறது. எந்த வரி உயரும், எந்த வரி குறையும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கிறார்கள். அதிலும் சில ஆண்டுகளாக ஏற்றங்கள்தாம் அதிகமாக உள்ளது. 2018 பட்ஜட்டில் மத்திய அரசு வெளிநாட்டு வாகனங்கள் வாங்க நினைப்பவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வெளிநாட்டு வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பார்கள் என்று வெளிநாட்டு வாகனத் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்த நிலையில் CKD வாகனங்களுக்குச் சுங்க வரியை 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகவும், CBU வாகனங்களுக்குச் சுங்க வரியை 20 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

பட்ஜட்

இந்தியாவில் உற்பத்தி செய்யவேண்டுமென்றால் பல ஏக்கர் கணக்கிலான தயாரிப்புத் தொழிற்சாலை தேவைப்படும். இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தன் வாகனங்களை CKD மற்றும் CUB என்ற இரண்டு வழிகளில் உள்ளே கொண்டுவந்து விற்பனை செய்துவருகின்றன. CKD முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் பாகங்களை எடுத்துவருவார்கள். இன்ஜின், கியர்பாக்ஸ், பிரேக் என்று தனித்தனியாகக் கொண்டுவந்து இங்கு அசம்பிள் செய்து விற்பனை செய்வார்கள். CUB என்பது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட முழு வாகனத்தையே இறக்குமதி செய்வது. `வெளிநாட்டில் விற்கப்படும் வாகனங்கள் வேண்டும்’ என முன்பதிவு செய்தால் இந்த இரண்டு முறைகளில் மட்டும்தான் உங்களுக்குக் கிடைக்கும். 

கார்களில் பிஎம்டயிள்யூ, பென்ஸ், ஆடி, லாண்ட் ரோவர் போன்ற சில வெளிநாட்டு நிறுவனங்களும், பைக்குகளில் யமாஹா, ஹோண்டா, கவாஸகி, ட்ரையம்ப், பெனெல்லி போன்ற பைக்குகளும் இந்த CKD முறையில் கொண்டுவரப்படுகின்றன. 2018 பட்ஜட்டில் மத்திய அரசு CKD முறையில் வரும் வாகனங்களின் வரியை 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், இந்த நிறுவனங்களின் பைக்குககள் ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை விலை உயர வாய்ப்புள்ளது. கார்களைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 90,000 ரூபாய் விலை உயர வாய்ப்புள்ளது. இது கார்களின் ஆன் ரோடு விலையைப் பொறுத்து மாறுபடும். கார் மற்றும் பைக் நிறுவனங்களிடமிருந்து இன்னும் சரியான விலைபட்டியல் வரவில்லை.

CBU வழியாக எந்த ஒரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு 20 சதவிகிதம் என்று இருந்த சுங்க வரி தற்போது 25 சதவிகிதமாக மாற்றப்பட்டுவிட்டது. கார் பிரியர்களுக்கு ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங்க் காரை பற்றி தெரிந்திருக்கும். இந்தக் காரின் அதிக பவர் கொண்ட வேரியன்டின் விலை அமெரிக்காவில் 30,000 டாலர். இதை அப்படியே இந்திய மதிப்புக்கு மாற்றினால் 20 லட்சம் ரூபாய். ஆனால், இதே காரை நாம் இந்தியாவில் வாங்கும்போது அதன் விலை 75 லட்ச ரூபாயாக உள்ளது. இது காரின் விலையை விட முன்று மடங்கு அதிகம். காரை இறக்குமதி செய்யும்போது சுங்க வரியாக 125 சதவிகிதம், ஜி.எஸ்.டி மற்றும் செஸ் வரி சேர்ந்து 53 சதவிகிதம் என மொத்தமாக 178 சதவிகித வரி செலுத்த வேண்டும்.

பட்ஜட் 2018

கார்கள், பைக்குகளுக்கு மட்டுமல்லாமல் வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் வாகனங்களான பஸ், ட்ரக், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கும் இந்த வரி ஏற்றம் பொருந்தும். மேலும், இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 7.5 சதவிகிதமாக இருக்கும் உதிரி பாகங்களுக்கான வரியை 15 சதவிகிதமாக மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. இந்தியாவில் தயாரிப்புத் தொழிற்சாலை வைத்துள்ள நிறுவனங்களாக இருந்தாலும், சில பாகங்கள் வெளிநாட்டிலிருந்துதான் வாங்க வேண்டும் என்ற நிலையும் உள்ளது. மேலும், தற்போது பி.எஸ்-6 கட்டாயமாக்கப்பட்டதால் நிச்சயம் வெளிநாட்டிலிருந்து சில பாகங்களை கார் நிறுவனங்கள் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. `பிரதமரின் மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்காக நிறுவனங்களை ஊக்கப்படுத்தவே இந்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுப் பொருள்களுக்கு வரி அதிகரிப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும்' என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

`மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிப்பதால், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும், இந்தியாவில் தொழிற்சாலைகளைத் தொடங்க நிறுவனங்கள் முன்வரும், இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், இந்த நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டிலுள்ள உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குள் கொண்டுவரலாம் என்பதெல்லாம் நல்ல விஷயங்களாக இருந்தாலும், இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்க, குறைந்தபட்சம் 400 ஏக்கர் நிலம் தேவைப்படும். சென்னையின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒரு கார் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. மறுசுழற்சி செய்தால் கூட 2 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் கிடைக்காது. வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் அதிகரிக்கும்போது கூடவே உதிரி பாகங்களின் தொழிற்சாலைகளும், வாகன விற்பனையகங்களும் அதிகரிக்கும். இட நெருக்கடி உருவாகும். இப்போது நடைபெறும் பருவநிலை மாற்றம் போன்ற சூழலியல் பிரச்னைகளை நிறுவனங்கள் அதிகரிக்குமே தவிர குறைப்பதற்கு வாய்ப்பில்லை. 

பட்ஜட்

இந்திய நிறுவனங்களையும், இந்தியாவில் உருவாகும் பொருள்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றால் அரசு சில ஆக்கபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம். குறைந்த அளவு நீரை உபயோகப்படுத்தும் நிறுவனத்திற்கோ அல்லது அதிக அளவு மறுசுழற்சி செய்யப்படும் நீரைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கோ, அரசு வரி சலுகைகளை அளிக்கலாம். தொழிற்சாலைகளின் சூழலை பசுமையாக வைத்துள்ள நிறுவனங்களுக்கு, தொழிற்சாலையைச் சுற்றி அதிக மரங்களை வைத்துள்ள நிறுவனங்கள் போன்றவற்றுக்கு வரிச் சலுகைகளைத் தருவதால், சூழல் கேடு குறைவதுமட்டுமல்லாமல் உற்பத்தியும் ஊக்குவிக்கப்படும்.

பி.எஸ்-6 இன்ஜின் தரம் கட்டாயமாக்கப்பட்டதால், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் பல சவால்கள் உள்ளன. இந்த நிலையில் அரசு இந்நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைக்கும், நேரடி வரிச் சலுகைகளை தந்து ஊக்குவிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குடைச்சல் கொடுப்பது எந்த வகையில் அந்த நிறுவனங்களை இந்தியாவுக்குள் நுழைய உந்துதலை ஏற்படுத்தும் என்பது சந்தேகமாகவே உள்ளது. 

மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரோலண்ட் ஃபோல்கர், 2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கார் அறிமுகவிழாவில் பேசியபோது, ``இந்தியாவில் அதிகச் செயல்திறனும், தரமும், உயர்ந்த தொழில்நுட்பமும் கொண்ட கார்களையும் குறைந்த விலையில் தருவதற்கு விருப்பம்தான். ஜி.எஸ்.டி வந்தபோது அனைவருக்கும் ஒரே வரி என்ற நிலையில் இறக்குமதி செய்யப்படும் கார்களும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் கார்களும் ஒரே சந்தை மதிப்புக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், செஸ் வரியை அதிகப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது அரசு. ஜி.எஸ்.டி எங்களுக்கு உதவும் என்று நினைத்தோம். ஆனால், தற்போது எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் வரி நிலையற்றதாக உள்ளது. வரிவிதிப்பு இதேபோல் நீடிக்கும் வரை எங்களால் குறைந்தவிலை காரை கூட, அதிகவிலையில் மட்டுமே விற்பனை செய்யமுடியும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

சொகுசு கார்

இந்த நிலையற்ற வரி என்பது நிறுவனங்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளதே தவிர, ஊக்குவிப்பதாக இல்லை. CKD மற்றும் CBU வழியாகப் பல நிறுவனங்கள் வாகனங்களை இறக்குமதி செய்தாலும், ஒரு சில வாகனங்கள் மட்டுமே வெற்றியடைகிறது. இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் 20 சதவிகிதம்கூட இந்த வாகனங்கள் இல்லை. தங்களுடைய பொருள்களுக்கு இந்தியாவில் பெரிய சந்தை இருக்கிறது எனும் நிலையில்தான் இந்நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியைத் தொடங்கும். வரி ஏற்றத்தின்மூலம் தற்போதைய விற்பனையும் குறைத்துவிட்டால், இந்நிறுவனங்கள் இந்தியாவின் மேல் உள்ள நம்பிக்கையை இழக்கவும் வாய்ப்புள்ளது. என்னதான் பணம் கொஞ்சம் அதிகமாக வைத்திருந்தாலும், 2000 ரூபாய்க்குப் பொருள் வாங்குபவனிடம் 1000 ரூபாயை வரியாக வசூலிப்பது என்பது 'அவனுக்கு மட்டும் எதுக்கு பணம். அதையும் பிடுங்கு, அவனும் ஏழையாகட்டும் ' எனும் மனநிலையின் வெளிப்பாடுதான். மெர்சிடீஸ் பென்ஸில் மைலேஜ் பார்ப்பவர்களும் இந்தியாவில் உள்ளனர்.

 


டிரெண்டிங் @ விகடன்