வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (06/02/2018)

கடைசி தொடர்பு:21:22 (06/02/2018)

'காங்கிரஸோடு 'கை' கோக்குமா கம்யூனிஸ்ட்?'

ராகுல்காந்தி

2019 - ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துவருகிறது. 'வலுவான நிலையில் ஆட்சி செய்துவரும் மத்திய பி.ஜே.பி-க்கு எதிராக, மதசார்பற்ற சக்திகள் ஒன்றுதிரள வேண்டும்' என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசிய அளவிலான கட்சிகளுக்குள் இப்போதே இதுகுறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்தப் பேச்சுக்களில் சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் இடையே மாறுபட்ட கருத்து எழுந்துள்ளது. இறுதியில், 'காங்கிரஸ் கட்சியுடன் மார்க்ஸிஸ்ட் கூட்டணி வைக்க வேண்டும்' என்ற சீதாராம் யெச்சூரியின் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. அடுத்த வாய்ப்பாக, வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இவ்விஷயம் குறித்த இறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

இதுகுறித்துப் பேசும் தோழர்கள், ''பொது எதிரியான பி.ஜே.பி-யை வீழ்த்த வேண்டும் என்பதில், கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கட்சிகளிடையே இருவேறு கருத்தில்லை என்பது உண்மைதான். ஆனால், அதே நேரம் இன்றைக்கு நாட்டில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் விரோத திட்டங்களுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள்தான் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை. அதனால்தான், நாடு தழுவிய கூட்டணி என்றில்லாமல், பிரச்னைகளைப் பொறுத்து அந்தந்த மாநில நிலைமைகளைக் கருத்தில்கொண்டு தேர்தல் உடன்பாடு மேற்கொள்ளும் மனநிலையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி

காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்திருப்பதான தோற்றம் வந்துவிடக் கூடாது; அதேசமயம் பொது எதிரியை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்கவேண்டிய நிர்பந்தமும் உள்ளதை நாங்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறோம். 

கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களைப் பொறுத்தவரை எங்களின் பிரதான எதிர்க்கட்சியே காங்கிரஸ்தான். இந்த மாநிலங்களில், நாங்கள் தனித்துதான் தேர்தலை எதிர்கொள்வோம். அதேசமயம், தமிழ்நாட்டு அரசியலில் பி.ஜே.பி-க்கு எந்தவித செல்வாக்கும் கிடையாது. காங்கிரஸும் பலமான கட்சியாக இல்லை. அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி உருவாகுமேயானால், நாங்கள் தி.மு.க தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிப்போம். அந்தக் கூட்டணியில் காங்கிரஸும் சேர்ந்திருப்பது எந்தவகையிலும் எங்களைப் பாதிக்காது. இப்படி மாநிலத்தைப் பொறுத்து முடிவுகள் வேறுபடலாம். எனவே, வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டில் எடுக்கப்படும் இறுதி முடிவும் இதையொட்டியதாகவே இருக்கும்'' என்கிறார்கள்.

ஆனால், நடந்துமுடிந்துள்ள மத்தியக் கமிட்டியில், காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தீர்மானம் தோல்வியுற்றுள்ள நிலையில், ''காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு எடுக்குமேயானால், அது தற்கொலைக்குச் சமமானதொரு முடிவு'' என்று காட்டமாக விமர்சித்துள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன்.

இன்றையச் சூழ்நிலையில், நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பி.ஜே.பி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவும் மற்றும் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, கர்நாடகா... என அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களும் காங்கிரஸ் கட்சியை பலமாகவே யோசிக்கவைத்துள்ளது. 

மோடி

கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்று, முதன்முதலாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறார். இளம் தலைவர், மதவாதத்துக்கு எதிரான கூட்டணி, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு... என பி.ஜே.பி-க்கு எதிராகப் பல்வேறு ப்ளஸ்களை வைத்திருக்கும் காங்கிரஸ், கூட்டணி விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டாகவேண்டிய சூழல் நிலவுகிறது. ஏனெனில், 2014-ம் ஆண்டு பதவியேற்ற மத்திய பி.ஜே.பி கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இதேவேகத்தில், நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்கும் முனைப்புடன் களமாடிவருகிறது பி.ஜே.பி. அதேசமயம், கட்சியின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மறைமுகமாக செயல்பட்டுவருவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நாளுக்குநாள் வலுப்பெற்று வருவதும், அக்கட்சியினர் எடுத்துவரும் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடுகளும் கட்சியின் பலத்தை சீர்குலைக்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

'காங்கிரஸ் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது' என்று பெங்களூரு மாநாட்டில் சூளுரைத்திருக்கிறார் பிரதமர் மோடி! ஆனாலும் காங்கிரஸ் தரப்பிலிருந்து, இதுவரையிலும் மோடிக்கு பதில் சொல்லப்படவில்லை. அறிக்கை, மேடைப்பேச்சு என்று வாய்ஜாலம் காட்டுவார்களா... அல்லது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், 'கூட்டணிக் கணக்குகளைச் சரிவரக் கையாளுவதில்தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றி அடங்கியிருக்கிறது' என்பதைப் புரிந்துகொண்டு செயலில் வென்று காட்டுவார்களா? 

என்ன செய்யப்போகிறார் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்?

- த.கதிரவன்


டிரெண்டிங் @ விகடன்