வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:09:38 (07/02/2018)

'விஜய் மல்லையா வாங்கிய கடன்குறித்த ஆவணங்கள் இல்லை!' - நிதியமைச்சகம் கைவிரிப்பு

பொதுத்துறை வங்கிகளிடம் விஜய் மல்லையா பெற்ற கடன்குறித்த ஆவணங்கள் தங்களிடம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இந்திய வங்கிகள் பலவற்றிலும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால், தேடப்பட்டுவரும் குற்றவாளியாக தொழிலதிபர் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. இதுகுறித்த வழக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 

இந்த நிலையில், விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய கடன் தொகைகுறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஆவணங்களை அளிக்குமாறு நிதியமைச்சகத்திடம், மத்தியத் தகவல் ஆணையம் கேட்டிருந்தது. ஆனால், அதுகுறித்த தகவல்கள் தங்களிடம் இல்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்த ராஜீவ் குமார் கார்கே என்பவர், விஜய் மல்லையா வாங்கிய கடன்கள்குறித்த தகவல்களை நிதியமைச்சகம் அளிக்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.