வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (07/02/2018)

கடைசி தொடர்பு:11:04 (07/02/2018)

ஜார்ஜ் ரெட்டி... ‘ஆய்த எழுத்தி'ன் நிஜ ’மைக்கேல்’!

ஜார்ஜ் ரெட்டி, george reddy

ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் வன்முறையின்மூலம் கொல்லப்படலாம். ஆனால், அவர்களைப்போல் ஆயிரம் பேர் எழக்கூடும். பகத் சிங், சே குவேரா போன்ற புரட்சியாளர்கள் வரிசையில், ஆந்திராவிலும் ஒரு மாணவப் புரட்சியாளர் தோன்றினார். அவர், வேறு யாருமல்ல... ''ஒரு நல்ல எதிர்காலத்துக்கான கனவுகள் என்றும் தொடரும்'' என்று சொன்ன ஜார்ஜ்  ரெட்டி.

இவர், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில், 1947-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே இவருடைய பெற்றோர் விவாகரத்துப் பெற்றுவிட்டதால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் ஜார்ஜ். விளையாட்டில் ஆர்வம்கொண்டிருந்தாலும், படிப்பிலும் படுசுட்டியாக விளங்கினார். அத்துடன், ப்ரொபஷனல் பாக்ஸராகவும் விளங்கினார். 1970 காலக்கட்டத்தில்,மேல்நிலை படிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள 'உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்' (Oshmaniya University) சேர்ந்தவருக்கு, அங்கு காணப்பட்ட சூழல், அவரை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. மதத்தால், இனத்தால், மொழியால் என அனைத்து மாணவர்களும் பிரிவினைக்கு ஆளாகியிருந்தனர். படிப்புக்கு முக்கியத்துவம் தராமல் அரசியல் கட்சியினர் அவர்களைப் பயன்படுத்திக்கொண்டனர். இதைக்கண்டு வெகுண்டெழுந்தார் ஜார்ஜ். அதற்கு அவர் சிறுவயதில் கற்ற கம்யூனிஸமும் உதவியது. இதனால், தன் சக மாணவர்களிடையே, ''நம்ம எல்லாரையும்... இங்க சாதி, மொழி, இன வேறுபடுத்தி அரசியல் செய்றாங்க; நம்ம காலேஜையே குப்பையா மாத்தி வெச்சிருக்காங்க; படிப்புக்கு முக்கியத்துவம் தர்றாம, தேவையில்லாததற்கு நம்மள மிஸ் யூஸ் பண்றாங்க'' என்று குரல்கொடுத்தார். 

இப்படி நாளுக்குநாள் மாணவர்களிடையே அவர்  தொடர்ந்து குரல்கொடுக்க... ஒருகட்டத்தில் அவருடைய புகழும் பரவத் தொடங்கியது. மாணவர்கள் மட்டுமல்லாது மக்களிடமும் அவருடைய பெயர் நிலைத்து நின்றது. இதைப் பிடிக்காத அரசியல் கட்சிக்காரர்கள், ''இவன் ஒரு மலையாளி'' என்று கூறி பிரிவினைவாதத்துக்கு வழிவகுத்தனர். ஆனால், அது யாரிடமும் எடுபடவில்லை. அப்போது கல்லூரி எலெக்சன் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ''நான் போட்டியிடுகிறேன்'' என்று தன் நண்பர்களிடம் கூறினார் ஜார்ஜ் ரெட்டி. ''ஏற்கெனவே நிறைய பிரச்னை. அது இல்லாம, இப்ப எலெக்‌ஷன்ல நின்னா பெரிய பிரச்னை ஆயிடும். வேண்டாம்'' என்று நண்பர்கள் கூறினர். ''நான் செத்தேன் என்றால், ஜார்ஜ் ரெட்டிங்கிற ஓர் உயிர் மட்டும்தான் போகும். ஆனா, என்னோட ஐடியா, விஷன் எதுவுமே சாகாது'' என்று சொல்லி மாணவர்களிடம் ஆதரவு பெற்றார்.

george reddy, ஜார்ஜ்

அன்று இரவு அவர், வீட்டுக்குப் போகும்போது இரவு 8 மணி. அப்போது 10-க்கும் மேற்பட்ட அடியாட்கள் வந்து ஜார்ஜ் ரெட்டியை மடக்கிப் பிடித்து தாக்கினர். ஜார்ஜ் ரெட்டி ஒரு ப்ரொபஷனல் பாக்ஸர் என்பதால், தனி ஒருவராக நின்று சமாளித்தார். சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரி வந்து மாணவர்களிடையே பிரசாரம் செய்தார். இது, கட்சிக்காரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற பழமொழிக்கேற்ப இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து அவரைப் பலியிடத் திட்டமிட்டன. ஏப்ரல் 14, 1972 அன்று, சில அடியாட்கள் ஜார்ஜ் ரெட்டியிடம் நண்பர்கள் மாதிரிப் பழகி... அவரை ஹாஸ்டலில் இருந்து வெளியே அழைத்துவந்தனர். பிறகு, கூடியிருந்த மாணவர்களின் முன்பு காவல் துறையினரால் பலமாகத் தாக்கப்பட்டார். 40 முறைக்கும் மேல் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை. தன்னுடைய 25-வது வயதிலேயே உயிரை இழந்தார் ஜார்ஜ் ரெட்டி. அவரது உடலை, ஹைதராபாத் முழுவதும்  ஊர்வலமாகக் கொண்டுசென்றனர் அவரது நண்பர்களும், மாணவர்களும்.

முதுகலை இயற்பியல் (MSc Physics-Gold Medal)  படித்த இவர், கம்யூனிஸம் மற்றும் மார்க்சிய கோட்பாடு போன்றவற்றை அதிகம் பேசியவர். ''அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியானது வெற்றிபெற்றிருந்தால், அவருக்கும் 'நோபல் பரிசு' கிடைத்திருக்கும்'' என்று அவருடைய பேராசிரியர்கள் புகழ்ந்ததாகச் செய்திகளும் உண்டு. ''மாணவர்கள் மத்தியில் கல்விக்காக ஒரு புரட்சியை உருவாக்கப் போராடிய ஜார்ஜ் ரெட்டி, ஏன் கலகக்காரராகச் சித்திரிக்கப்பட்டார் என்று இன்றுவரை தெரியவில்லை'' என்கின்றனர் அவர் வழிவந்தவர்கள். தற்போது இவருடன் படித்தவர்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.  அவரது நண்பர்கள், '' ஜார்ஜும் இன்று உயிருடன் இருந்திருந்தால்,எண்ணற்ற பரிசுகளைப் பெற்றிருப்பார். இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சித் தலைவராகவும் விளங்கியிருப்பார்" என்கின்றனர். இவருடைய நினைவுநாள் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, PDSU  என்ற முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

2012-ம் ஆண்டு இவருடைய 40-வது ஆண்டு நினைவு நாளையொட்டி இவரது வாழ்க்கை குறித்த ஓர் ஆவணப்படமும், 'ரெமினிசென்ஸ் ஆஃப் ஜார்ஜ் ரெட்டி'  (Reminiscences of George Reddy) என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தில் இடம்பெறும் மைக்கேல் (சூர்யா ஏற்றிருந்தது) என்கிற கதாபாத்திரம், 'ஜார்ஜ் ரெட்டியை' மையப்படுத்தியதாகவே இருக்கும். இப்படத்தைப் பார்த்தவர்களுக்கு, இப்படி ஓர் இளைஞன் அரசியலுக்கு வரமாட்டானா என்று நினைத்ததுகூட உண்டு. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், வந்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பலருடைய குரலாக இருக்கிறதே தவிர, அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படியே உருவாக்கிக்கொண்டு வரும் இளைஞர்களையும் உயிரோடு விடுவதில்லை ஆளும் அரசியல்வாதிகள். இப்படி, 1970-களிலேயே  மாற்றத்தை விதைக்க முயன்ற ஜார்ஜ் ரெட்டியைத்தான் மற்றவர்கள் உருவாகவிடாமல் தடுத்துவிட்டனர். இன்றும் தடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

''நீங்கள் வாழவேண்டும் என்றால், ஒவ்வொரு கட்டத்திலும் போராடக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்ற ஜார்ஜ் ரெட்டிக்கு, போராட வாய்ப்புக் கிடைத்தது... ஆனால், வாழ வாய்ப்புக் கிடைக்கவில்லை.


டிரெண்டிங் @ விகடன்