வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (07/02/2018)

கடைசி தொடர்பு:16:53 (07/02/2018)

``உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேலைவாய்ப்புதான்; சொற்பொழிவு அல்ல'' - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி காட்டமான பதில்

ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடிய மோடி, கடந்த காலத்தில் எதை விதைத்ததோ அதையே காங்கிரஸ் அறுவடை செய்கிறது என விமர்சனம் செய்தார். மேலும், ``ஒரு குடும்ப வளர்ச்சியைப் பற்றி மட்டுமே கவலைகொண்டதால் காங்கிரஸ் ஆட்சியில் மற்ற நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா வளரவில்லை. தங்களின் சுயநலத்துக்காக நாட்டை காங்கிரஸ் துண்டாக்கியது" என்பன உள்ளிட்ட கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்தநிலையில் பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் பதிலளித்துள்ளார். அதில், பிரதமர் உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. பிரதமரிடமிருந்து மக்கள் வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கின்றனர். சொற்பொழிவை அல்ல" என்றார்.

இதேபோல் பிரதமரின் விமர்சனத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல், "தாம் பிரதமர் என்பதையே பிரதமர் மோடி மறந்துவிட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியும் ரபேல் விமான முறைகேடு, வேலைவாய்ப்பு, விவசாயம் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மோடியிடம் பதிலில்லை. மக்களவையில் மோடி பேசியது தேர்தல் பிரச்சார உரைபோல் இருந்தது. மக்கள் பிரச்னைகள் குறித்து எதுவும் பிரதமர் பேசவில்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க