வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (08/02/2018)

கடைசி தொடர்பு:07:58 (08/02/2018)

“வசதியான குடும்பத்தில் வளர்ந்ததால் இந்தப் பிரச்னை புரியவில்லை!” - ‘மாதவிடாய்’ பிரசாரத்தில் மனுஷி சில்லர்

மனுஷி சில்லர், உலக அழகிப் பட்டத்தை மட்டுமல்ல, 2017-ம் ஆண்டின் `அழகுடன் இணைந்த நல்ல நோக்கம்' (Beauty With a Purpose) எனும் பட்டத்தையும் தன்வசமாக்கியுள்ளார். இந்த அழகியின் நோக்கம், உலகளவில் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு சுகாதார விழிப்புஉணர்வு, முக்கியமாக மாதவிடாய் மற்றும் நாப்கின் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதே! இதைத் தொடர்ந்து தன் முதல்கட்டப் பயணத்தை கடந்த வெள்ளியன்று ஹைதராபாத்திலிருந்து தொடங்கினார் சில்லர். ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள கிராமங்களைக் கடந்து, தற்போது டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவரின் விழிப்புஉணர்வு பிரசாரத்துக்கு ஆதரவாக, 2017-ம் ஆண்டின் உலக அழகிப் போட்டியில் சில்லருடன் பயணித்த சில வெளிநாட்டு அழகிகளும் மற்றும் அரசு சாரா அமைப்புகளும் கைகோத்துள்ளனர்.

Manushi Chillar

`புராஜெக்ட் ஷக்தி' மூலம் ஏற்கெனவே மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சில்லர், இந்தப் பிரசாரத்தின்போது, ``வசதியான குடும்பத்தில் வளர்ந்ததால், மாதவிடாய் என்பது இந்திய அளவில் பெண்களுக்கு இவ்வளவு பெரிய பிரச்னை என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. கிராமப்புறங்களில் பெண்கள் மிகவும் அவதிப்படுவது எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற விஷயம் என்னை மிகவும் பாதித்தது. 18 வயதுப் பெண்ணாக என்ன செய்ய வேண்டும் என எனக்குப் புரியவில்லை. இது அனைவரும் கவனிக்கவேண்டிய விஷயம்.

இந்தப் பிரச்னையைப் பற்றி என் பெற்றோருடன் பேசினேன். கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் நாப்கின் உபயோகம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர்களின் ஆலோசனைப்படிதான் இப்போது பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளேன். இங்கே சுகாதாரப் பொருள்களும் சரியாகக் கிடைப்பதில்லை. நாப்கின் வாங்குவதற்குக்கூட பணவசதி இல்லாத வீடுகளும் உள்ளன. இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். இதற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்" என்று கூறினார்.

மனுஷி சில்லர்

முதல்கட்ட பிரசாரத்தின் முடிவில் ``எங்களுடைய பிரசாரம் பெண்களுக்கானது மட்டுமல்ல... அவர்களின் குடும்பங்களுக்கும்தான். நாப்கின் உபயோகிப்பதன் நற்பயனையும், அதனால் பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றியும் கலந்துரையாடினோம். முதன்முறையாக இலவச நாப்கின்களை அனைவருக்கும் வழங்கினோம். அவர்கள் அதன் பலனை உணர்ந்து தங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்" என்று பூரிக்கிறார் மனுஷி சில்லர்.

Chillar

நாப்கின் அகற்றுவதிலும் பல பிரச்னைகள் இருப்பதால், `ஆக்கர் இன்னோவேஷன்ஸ்' எனும் அரசு சாரா அமைப்போடு இணைந்து மக்கும் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கும் முறை மற்றும் இவற்றை கிராமங்களில் கொண்டுசேர்க்கும் வழிமுறைகளைப் பற்றியும் ஆலோசித்தார் சில்லர்.

ஆக்கர் இன்னோவேஷன்ஸ் நிறுவனர் ஜெயதீப் மண்டல், “நாப்கின்களுக்கு முன்பைவிட தற்போது இரண்டு மடங்கு அதிகமாக வரி வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் இதுபோன்ற Eco Friendly பொருள்களுக்கு வரி இல்லாமல் இருப்பது நன்று. எங்கள் நாப்கின் தயாரிப்பு, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. கிராமப்புறப் பெண்களுக்கு நிச்சயம் உதவும்" என்று கூறினார்.

மேலும், ஆண்களுக்கும் மாதவிடாய் சுகாதார விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டனர். இதுமட்டுமல்லாமல், மனுஷி சில்லரும் `ஜூட்'டிலிருந்து செய்யப்படும் விலை மலிவான சானிட்டரி நாப்கினுக்கான செய்முறைகளைச் செய்துகாட்டினார்.

Chillar on Tour

தொடர்ச்சியாக, “தங்களின் பழைய வழக்கத்திலிருந்து மாறுவதற்குத் தயங்கும் பெண்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களிடம், அவர்களின் பழக்கம் தவறு எனக் கூறி, நாப்கின்களை உபயோகப்படுத்தச் சொல்லக் கூடாது. அவர்கள் மாற மாட்டார்கள். அவர்களிடம், `உங்கள் முறை சரியானதுதான். ஆனால், இதையும் ஒருமுறை உபயோகித்துப்பார்க்கலாமே!' என்று கூறிப்பாருங்கள். அவர்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு நம்மால் முடிந்த சிறு உதவியாக இருக்கும்" என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார் சில்லர்.

Chillar with Napkin

உலக அழகி 2016 ஸ்டெஃபானி டெல் வாலே, ஆப்பிரிக்க அழகி மெக்லீன் ஜெரூடோ, ஆசிய அழகி ஹா யூன் கிம், ஓஷியானா அழகி அன்னி டயன் ஈவான்ஸ், ஐரோப்பிய அழகி ஸ்டெஃபானி ஜேன் ஹில், கரிபியன் அழகி சொலாஞ் ஜான்சன் சின்க்ளேர் மற்றும் அமெரிக்க அழகி அல்மா ஆண்ட்ரியா மிசா கர்மோனா ஆகியோருடன், டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சில்லர், ``ஒவ்வொரு தனிநபருக்கும் சமுதாயப் பொறுப்புஉணர்ச்சி இருக்க வேண்டும். இதுவே ஒழுங்கான சமுதாயம் அமைய உறுதுணையாக இருக்கும். அரசியல்வாதிகளுக்குத்தான் பொறுப்புஉணர்ச்சி இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக தேசத்தின் முன்னேற்றத்துக்காகச் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Manushi with other pageants

மேலும் இதுபோன்ற தவிர்க்கப்படும் பிரச்னைகளை உடைத்து, பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவ முன்வந்திருக்கிறார் `உலக அழகி' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா மோர்லி. இவர், அனைத்து கிராமங்களுக்கும் நாப்கின் சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இத்துடன் தற்போது ட்ரெண்டில் போய்க்கொண்டிருக்கும் `பேட்மேன் (Padman)' சேலஞ்சும் இணைந்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்