பெண் ஃபேஸ்புக் ஐ.டி-யில் வந்த பாகிஸ்தான் உளவு அமைப்பு! - மாய வலையில் மாட்டிக்கொண்ட இந்திய விமானப்படை அதிகாரி

இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி அருண் மர்வாவை நேற்றிரவு டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

arun marwaha
 

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அருண் மார்வா (51), கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஸ்மார்ட் போனுடன் டெல்லியில் உள்ள இந்திய விமானப் படையின் தலைமையகத்துக்குள் நுழைந்தார். பொதுவாக,  பாதுகாப்புக் காரணங்களுக்காக தலைமையகத்துக்குள் ஸ்மார்ட் போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. காவலர்கள், அருண் மார்வாவை சந்தேகத்தின் பேரில் சோதனைசெய்தனர். அவரிடமிருந்து ஸ்மார்ட் போன் பறிமுதல்செய்யப்பட்டது. அருண் மார்வாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. அவர், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய தகவல்களைப் பகிர்ந்ததாக, இந்திய விமானப்படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அருண் மார்வாவின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. 
அருண் மார்வாவுக்கு, கடந்த டிசம்பர் மாதம் இரண்டு பெண்களின் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து நட்பு அழைப்பு வந்தது. அருண், நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டதும், அவர்கள் மாற்றிமாற்றி ஃபேஸ்புக்கில் சாட் செய்துள்ளனர். ஒருகட்டத்தில், நெருங்கிய நண்பர்களாக மாறி, வாட்ஸ்அப் எண்ணையும் பகிர்ந்துகொண்டனர். வாட்ஸ்அப்பில் எல்லைமீறிப் பேசிக்கொண்டனர்.

அருண், நெருக்கமாகப் பேசத் தொடங்கினார். அந்த இரண்டு பெண்களின் மாய வலையில் சிக்கிய அருணுக்கு, ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள், பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் (ISI) சேர்ந்தவர்கள்.

அருண் ஆபாசமாக சாட் செய்ததை இணையத்தில் அம்பலப்படுத்திவிடுவதாக மிரட்டி, இந்திய விமானப்படையின் பாதுகாப்புத் தகவல்களைப் பகிரும்படி வலியுறுத்தியுள்ளனர். அருண் வேறு வழியில்லாமல் இந்திய விமானப்படையின் செயல்பாடுகள் பற்றிய ஆவணங்களை மொபைலில் படமெடுத்து, வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். ஸ்மார்ட் போனுடன் இந்திய விமானப்படை தலைமையகத்துக்குள் நுழைந்ததும் அதற்காகத்தான். ஆனால், காவலர்களிடம் அருண் சிக்கிக்கொண்டார். மேலும், அவருடன் பேசியது உண்மையிலேயே பெண்கள்தானா அல்லது ஃபேக் ஐடிக்களா, அவர்களின் நோக்கம் என்ன என்பதுபற்றி சைபர் பிரிவு போலீஸார் ஆய்வுசெய்துவருகின்றனர். 

இந்நிலையில், மூத்த விமானப்படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், அருண் மார்வா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் நேற்று அவரைக் கைதுசெய்தது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!