கலைகளில் என்ன கட்டுப்பாடு...?! விதிகளை உடைத்து வீதிகளில் அரங்கேறும் `Wild’ பரதநாட்டியம்! | Wild Bharatanatyam going beyond rules and also the borders

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (09/02/2018)

கடைசி தொடர்பு:13:40 (09/02/2018)

கலைகளில் என்ன கட்டுப்பாடு...?! விதிகளை உடைத்து வீதிகளில் அரங்கேறும் `Wild’ பரதநாட்டியம்!

``இது இது இப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதிகளை யார் விதித்தது? கலை என்பது, மக்களுக்குத்தானே!” என்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த ஐஷ்வர்யா கலி.

மரண வீடுகளிலும், குறுக்குச்சந்துகளிலும், ஆடிமாதத் திருவிழாக்களிலும் மட்டுமே ஒலித்த சட்டிமேளம், பறை இசைக்கருவிகளுடன் கோட் சூட் அணிந்த பாடகர்கள் மேடை ஏறிய அந்த இசை நிகழ்வை சென்னை பார்த்தது. பரதநாட்டியத்தை எந்தவிதப் பாரம்பர்ய ஒப்பனைகளும் இல்லாமல், சலங்கையுடன் தெருக்களிலும் மால்களிலும் தனது தோழிகளை ஆடவைத்துப் பதிவேற்றி, தடைகளை உடைக்கிறார்கள் ஐஷ்வர்யா கலி, ப்ரியங்கா கலி சகோதரிகள். 

பரதநாட்டியம்

தங்களது 13 வயது தங்கையின் பரதநாட்டிய வகுப்புத் தேர்வுகளுக்கு உதவுமாறு, தன் இரு தோழிகள் ஸ்வாதி கங்காதரன், தீர்ணாவிடம் கேட்டிருக்கிறார் ஐஷ்வர்யா. பரதநாட்டியக் கலைஞர்களான இருவரும் கொடுத்த பயிற்சியை வீடியோ எடுத்தபோது தொடங்கியிருக்கிறது `Bharathanatyam in the Wild'. ``சலங்கைகள்கூட அணியாமல், அவர்கள் கொடுத்த அடவுப் பயிற்சியின் வீடியோவை, பலமுறை பார்த்தோம். எங்கள் இருவருக்கும் இது புதுவித அனுபவமாக இருந்தது. கட்டுப்பாடுகளுக்குள் அடங்காமல், ஒப்பனைகள் இல்லாமல் அவர்கள் கொடுத்த பயிற்சியில், விடுதலையின் அழகை உணர முடிந்தது. இத்தகைய வீடியோக்களைத் தொடர்ச்சியாகச் செய்வது என முடிவெடுத்தோம். தொடக்கத்தில், பதறிய ஸ்வாதியும் தீர்ணாவும் போகப்போக ஒத்துழைத்தார்கள்” என்கிறார் ஐஷ்வர்யா.

பரதநாட்டியம்

`எந்தவிதமான எதிர்ப்புகளை எதிர்கொண்டீர்கள்’ எனக் கேட்டதற்கு, அவர் ``எதிர்ப்புகள் எழாமலா... புனிதமானது, தெய்வீகமானது போன்ற வார்த்தைகளைச் சொல்லிக் கோயில்களுக்குள்ளும் அதற்கான அரங்கங்களிலும் மட்டுமே நடத்தப்பட்ட கலையைத் தெருக்களில் நடத்தியபோது, பலரிடமும் எதிர்ப்புகள் இருந்தன. `மக்கள் வாழும் எந்த இடமும் எப்படிப் புனிதமில்லாததாக மாறுகிறது?' என்ற கேள்வியை எழுப்பினோம். சமாதானம் அடையாதவர்களைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்லப்போவதில்லை. தேவையற்ற, பயனில்லாத கட்டுப்பாடுகள் தேவையில்லாமல் போகவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறோம். பரதக்கலையைக் கற்றுக்கொடுக்கும் மேதைகளும் பார்வையாளர்களும், பாசிட்டிவ்-நெகட்டிவ் விமர்சனங்கள் இரண்டையும்தான் சொல்கிறார்கள். நாங்கள் அதைக் கவனித்து, எங்கள் தரப்பையும் விளக்குகிறோம்” என்கிறார் உறுதியாக.

மேலும், ``கூடைப்பந்து அரங்கம், நூலகம், வகுப்பறைகள், பேருந்துநிலையங்கள், நடைபாதைகள், மெட்ரோ நிலையங்கள், அப்பார்ட்மென்ட்கள் என விரிவடைந்திருக்கிறது இந்த `wild’ பரதநாட்டியம். இந்த இசை வடிவத்தை இந்த இடத்துல இசைக்கணும், இங்கே மட்டும் நடனமாடணும்னு எதற்காக இவ்வளவு விதிகள்? ஒரு விஷயம் புனிதமாகும்போதே, இன்னொரு விஷயம் புனிதமில்லாதது அல்லது அருவருப்பானது என்று ஆகிவிடுகிறதே! ஸ்வாதியும் தீர்ணாவும் ஒரே பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவ்வளவு இசைவான அவர்களின் நடனத்தை, சுதந்திரக் கலையைப் பதிவுசெய்து ஆவணமாக்குவதைத் தொடர்கிறோம்” என்றார் ஐஷ்வர்யா.

இவரின் இந்த யோசனையை முதலில் மறுத்ததாகக் கூறிய பரதக்கலைஞர் ஸ்வாதி, ``என் தலைக்குள் ஏற்கெனவே ஏற்றப்பட்ட சில விதிகளை மீறுவதாகவும், பாவம் செய்வதுபோலவும் ஆரம்பத்தில் உணர்ந்தேன். சாலைகளில் சலங்கையை அணிவதும், சல்வார் அணிந்துகொண்டு ஆடுவதும் எனக்கே வித்தியாசமான பயத்தைக் கொடுத்தது. ஐஷ்வர்யாவும் ப்ரியங்காவும் இந்தத் தயக்கங்களை உடைப்பதற்கு உதவினார்கள். சாலைகளிலோ, வேறு இடங்களிலோ மேக்கப் இல்லாமல், பாரம்பர்ய உடைகள் அணியாமல் நடனமாடுவதால், இந்தக் கலைக்கு எந்த இழுக்கும் இல்லை. எந்தக் காலத்தில் நடந்த கதைகளையும் அழகாக வெளிப்படுத்தும் இந்த நடன வடிவத்தை, சில வட்டங்கள் போட்டு அதற்குள் வைக்கவேண்டியதில்லை. 15 வருடங்களாகப் பரதநாட்டியம் கற்றுவரும் எனக்கு, இதில் விதிக்கப்பட்டிருக்கும் பல விதிகள், நாட்டியம் ஆடுபவர்களின் உடல் அமைப்பை அதிகமாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதாக என்னால் உணர முடிகிறது” என்றார். 

பரதநாட்டியம்  

ஐஷ்வர்யா குழுவுடன் அனைத்து முயற்சிகளிலும் இணைந்திருக்கும் மற்றொருவர், ``இந்து மதத்தில் இருக்கும் ஆதிக்கச் சாதியினரும் பிராமணர்களும் மட்டும் பயில்வதாகவும் ஆடுவதாகவும் இந்தக் கலை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. உள்ளடக்கத்தில், எந்த உணர்வையும் பிரதிபலிக்கும் பரதநாட்டியம், கட்டுப்பாடுகளை உடைத்து எல்லோருக்குமானதாக வேண்டும். தேவாலயங்களிலும் மசூதிகளிலும் நாட்டியம் ஆடி பதிவுசெய்து வருகிறோம். கதக், மோகினியாட்டம் போன்ற வடிவங்களை ஆடும் நண்பர்களையும் இந்த முயற்சிக்கு அழைத்திருக்கிறோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்