வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (09/02/2018)

கடைசி தொடர்பு:16:19 (09/02/2018)

நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் அமைக்கும் மெகா கூட்டணி!

நாடாளுமன்றம்

 

 “இன்னும் நூறு நாள்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடும்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார் ‘நிதி டிஜிட்டல்’ எனும் நிறுவனத்தைச் சார்ந்த ராஜேஷ் ஜெயின். இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘நிதி டிஜிட்டல்’ நிறுவனத்தின் மூலம் பி.ஜே.பி-யின் பிரசாரத்துக்கு உதவிகரமாக இருந்தவர். அவர் மேலும், “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்று யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள். அதனால், இந்த அறிவிப்பின் மூலமாக எதிர்க் கட்சிகளுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கவுள்ளது பி.ஜே.பி.” என்று கூறியுள்ளார். 

இதனைவைத்துப் பார்க்கும்போது விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றே தெரிகிறது. அதற்கான சாத்தியக்கூறுகளும் அப்படித்தான் இருக்கின்றன. மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்திருந்த பட்ஜெட், தேர்தலைக் குறிவைத்தே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு நடந்த சட்டசபைத் தேர்தல்கள் பலவற்றில், பி.ஜே.பி-யே அமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அதேபோலச் சில இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பி.ஜே.பி-யே வென்றுள்ளது. இதுதவிர, பிரபல செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய மெகா இணையதள வாக்கெடுப்பில், “ஜி.எஸ்.டி. அமலாக்கம், பண மதிப்பிழப்பு, குஜராத் தேர்தலில் மோடிக்கு எதிரான பலத்த எதிர்ப்புப் பிரசாரம் ஆகியவற்றையும் தாண்டி இன்று நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடந்தாலும் மோடிதான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பார்”  என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் மோடிக்கு இன்னும் செல்வாக்கு இருப்பதாகவே சொல்லப்படுவதுடன், மீண்டும் மோடியே வருவார் என்றும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசியல் ஆய்வாளரான அமுல்யா கங்குலி, “இன்னும் இருபது மாதங்கள் காத்திருப்பதைவிட, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கிடைத்த நற்பெயரை அறுவடை செய்வதே பி.ஜே.பி-க்கு நலம் பயக்கும். இல்லாவிட்டால், விவசாயிகள் போராட்டம், வேலையில்லாப் பிரச்னை போன்றவை பெருமளவில் தலைதூக்கும்” என்று கூறியுள்ளார். 

வாக்குப்பதிவு இயந்திரம்

இப்படிப் பலரும் பி.ஜே.பி-க்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வரும் வேளையில், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளை அந்தக் கட்சி கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது. இதனால், விரைவில் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வந்தால் அதைச் சந்திக்கத் தயாராகவும், பி.ஜே.பி-யை வீழ்த்துவதற்கும் திட்டங்கள் தீட்டி வருகின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள். குறிப்பாக, சமாஜ்வாடி கட்சியினர், “நாங்கள் இதற்குத் தயாராக இருக்கிறோம். இதைக் கணித்தே எங்கள் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்ணோஜ் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்” என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நாளன்று (பிப்ரவரி - 1), நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஜெய்பிரகாஷ் நாராயண், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ ப்ரேன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உள்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 17 கட்சிகளைச் சார்ந்த முக்கியப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், முத்தலாக் சட்ட மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விவகாரம், உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இனமோதல் உள்ளிட்டவை குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்தும், தேசியப் பிரச்னைகளில் ஒன்றிணைந்து போராடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்வதில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைப்பதில், சோனியா காந்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் பொறுப்பேற்றிருந்தாலும், அவர் தலைமையின்கீழ் செயல்பட, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தயங்குகின்றனர். ஆனாலும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகச் சோனியா காந்தியே தற்போதும் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோனியா காந்தி, ராகுல் காந்தி

இதைவைத்துத்தான் மோடிக்கு எதிராகப் பலம்வாய்ந்த கூட்டணி அமைப்பதில், சோனியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், பிற கட்சிகளை இணைக்கும் பாலமாக, சோனியாவே இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். இதன்மூலம், மோடிக்கு எதிராக அமையவுள்ள மெகா கூட்டணிக்கு, காங்கிரஸ் கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதுடன், அதற்காகக் காங்கிரஸ் நிர்வாகிகள் சோனியாவைக் களமிறக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சோனியாவின் வருகை சரத்பவார், மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, முலாயம் சிங், மாயாவதி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. 

இதன்மூலம் பி.ஜே.பி-க்கு எதிரான, “தேசிய அளவிலான எதிரணிக்கு நான்தான் தலைவராக இருப்பேன்; ராகுல் காந்தி அல்ல” என்று எதிர்க் கட்சித் தலைவர்களுக்குச் செய்தி அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், பி.ஜே.பி-யை வரும் தேர்தலில் எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும் பரவலாகக் கருத்துச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம்,“காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை” என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் உடைத்து மீண்டும் வலுவான கூட்டணியைச் சோனியா காந்தி உருவாக்க வேண்டும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் வேளையில், 29 ஆண்டுக்காலம் பி.ஜே.பி-யுடன் இணைந்திருந்த சிவசேனா, தற்போது அந்தக் கூட்டணியை முறித்துள்ளது. அதேபோல் தெலுங்கு தேசம், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் பி.ஜே.பி-க்கு எதிராகக் கொடிபிடித்து வருகின்றன. எப்படியிருந்தாலும் வரும் தேர்தலுக்குள் இவற்றையெல்லாம் ஓரணியாக இணைத்து, சோனியா காந்தி தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். மத்திய பட்ஜெட்டை மனதில்வைத்து தேர்தலைச் சந்திக்கத் தயாராய் இருக்கும் பி.ஜே.பி-க்கு எதிராக, அவர்களுடைய மதவாத அரசியலை முன்னெடுத்துச் செல்ல மெகா கூட்டணிக்குத் தயாராகிவிட்டது காங்கிரஸ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்