வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (09/02/2018)

கடைசி தொடர்பு:19:44 (09/02/2018)

சென்னை ஐ.ஐ.டி-யில் சமஸ்கிருத இருக்கை..?!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காகப் பலரும் நிதியுதவி செய்துவரும் வேளையில், சென்னை ஐ.ஐ.டி-யில் சம்ஸ்கிருத இருக்கை அமைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. 

IIT


புதியதாக அமையவிருக்கும் சம்ஸ்கிருத இருக்கை சென்னை ஐ.ஐ.டி-யின் மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் கீழ் இயங்க இருக்கிறது. இந்த இருக்கை, வேத காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டையும், அதில் சம்ஸ்கிருத மொழியின் தாக்கம் குறித்தும் ஆராய்ச்சி செய்யவிருக்கிறது. 

சம்ஸ்கிருத இருக்கை அமைவதற்காக, சென்னை ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்களான ஆன்மிக அறிவியல் அமைப்பின் தலைவர் ராஜேந்தர் சிங் மகாராஜ், சவான் கிரிபால் ரூஹானி இருவரும் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர். இதில், மகாராஜ் சிங் மட்டும் 90 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளார். இவர் வழங்கும் தொகையில் 75 லட்ச ரூபாயை, சம்ஸ்கிருதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சம்ஸ்கிருத இருக்கைக்கு ஶ்ரீ ஆரபிந்தோ இந்தியா கலசார அமைப்பின் இயக்குநர் சம்பந்தநந்தா மிஸ்ரா  தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர், `` ஒரு மாத கால அளவில் இருக்கையின் தலைமைப் பதவி ஏற்கயிருக்கிறேன். சம்ஸ்கிருதம் என்பது விஞ்ஞான மொழி. இது இந்தியாவின் ஆன்மாவை வெளிப்படுத்தும் மொழியாகவும் இருக்கிறது. மனித இனத்தின் பரிமாண வளர்ச்சியின் முற்போக்கான மொழி. மக்கள் சம்ஸ்கிருதத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. சம்ஸ்கிருதம் மதம் சார்ந்தே பார்க்கப்படுகிறது.  

ஐஐடிசம்ஸ்கிருத மொழியின் அருமையை சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு நன்கு அறிய இந்த இருக்கையைப் பயன்படுத்திக்கொள்வேன்.  பண்டைய இந்தியாவில் ரிஷி மற்றும் துறவிகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பை மாணவர்களுக்கு விளக்கவுள்ளேன். அறிவியலையும், கலாசாரத்தையும் யோகி கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். இதற்காகவே, பண்டைய இந்தியாவில் சம்ஸ்கிருதம் மூலம் விஞ்ஞானிகள் செய்திருக்கும் சாதனைகள் குறித்து பாடத்திட்டத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு அனுமதி வழங்கினால், இதனை ஐ.ஐ.டி மாணவர்களின் பாடத்திட்டத்திலும் சம்ஸ்கிருத மொழியைச் சேர்க்க அனைத்து உதவிகளையும் செய்வேன். சம்ஸ்கிருத பங்களிப்பு குறித்து அதிகளவில் ஆராய்ச்சி செய்யவும் வழி செய்வேன்.

அறிவியலும், சம்ஸ்கிருதமும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது. இதனால் அறிவியல் ஆராய்ச்சிக்கு சம்ஸ்கிருதம் மிகவும் உதவியாக இருக்கும். உதாரணத்துக்கு, விஞ்ஞானிகள் நீரை ஒரு பொருளாக மட்டும்தான் பார்க்கிறார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தில் நீர் குறித்து 27 வார்த்தைகள் இருக்கின்றன. நீரை பல்வேறு பரிமாணத்தில் பார்த்து ஆராய்ச்சி செய்ய இது உதவும்" என்று சொல்லும் சம்பந்தநந்தா, உட்கல் பல்கலைக்கழகத்தில், `மனிதர்களின் மொழி வளர்ச்சியில் சம்ஸ்கிருதம்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். 

சம்ஸ்கிருத இருக்கை குறித்து சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, "புதிய இருக்கைக்கு மகாராஜ் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது உண்மைத்தான். ஐ.ஐ.டி நிர்வாகமே புதிய ஆய்வு இருக்கைக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கும். நிதி வழங்குபவர்கள் யாரை தலைமை பதவிக்கு நியமிக்கலாம் என்று பரிந்துரை மட்டும் செய்ய முடியும். ஐ.ஐ.டி நிர்வாகம்தான் இறுதி முடிவை எடுக்கும்" என்றார்.

ஐஐடி
டெல்லியில் அமைந்துள்ள ஆன்மிக அறிவியல் அமைப்பின் தலைவராக உள்ள மகராஜ், 1967-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி-யில் பி.டெக் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்  படித்திருக்கிறார்.  இருபது வருடங்களாக பொறியியல், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய பின்பு ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். மகாராஜ்  ஐ.ஐ.டி இணையதள பக்கத்தில், 'அறிவியலில் ஆன்மிகத்தை  எப்படி பயன்படுத்த முடியும்?' என்று விவரித்து இருக்கிறார். `ஆன்மிகம் சக்தி வாய்ந்தது என்பது குறித்து அறிவியல் ஆய்வகத்தில் சோதனை செய்து பார்க்கலாம். இதனை ஆய்வின் மூலம் நிரூபிக்கவும் முடியும்" என்று சொல்லியிருக்கிறார்.  
 


டிரெண்டிங் @ விகடன்