வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/02/2018)

``வரதட்சணை கொடுமையால் 3 ஆண்டுகளில் 23,710 பேர் உயிரிழப்பு!'’ - உத்தரப்பிரதேசம் முதலிடம்!

2014 - 2016-ம் ஆண்டு காலகட்டத்தில் வரதட்சணை கொடுமையால் அதிகமாக உயிரிழந்தவர்களில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 

நாகரிக வளர்ச்சி மேலோங்கி வரும் இந்தக் காலகட்டத்திலும் வரதட்சணை வாங்கும் மற்றும் கொடுக்கும் பழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வசதி படைத்தவர்கள், வசதி இல்லாதவர்கள் என அனைத்து தரப்பிலான பெண் வீட்டாரும் தங்களால் முடிந்த வரை வரதட்சணை வழங்கி வருகின்றனர். சட்டப்படி வரதட்சணை வாங்குவது தவறு என்றாலும் வெளிப்படையாகவே வரதட்சணை வாங்கும் நிகழ்வுகள் பெரும்பாலான திருமணங்களில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, 2014 -16 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவான வரதட்சணை கொடுமை வழக்குகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 23,710 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் வரதட்சணை கொடுமையால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அந்த மாநிலத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமையால் 7,277 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 7,766 வரதட்சணை வழக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடத்தில் பீகார் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் இந்த மூன்று ஆண்டுகளில் 218 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க