``நீதிபதி லோயா மரணத்தில் சுதந்திரமான விசாரணை!’’ - குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்திய 114 எம்.பி-க்கள்

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வலியுறுத்தினர். 


குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தபோது போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளை மும்பை நீதிமன்ற நீதிபதி பிரிஜ்பால் லோயா விசாரித்து வந்தார். அப்போது, வழக்கில் அமித்ஷா ஆஜராகாமல் தவிர்த்துவந்தபோது நீதிபதி லோயா கடுமை காட்டினார். வழக்கில் தீர்ப்பு 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் லோதா, டிசம்பர் 1-ம் தேதி திடீரென உயிரிழந்தார். நாக்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவருக்கு இதய முடக்கம் (கார்டியாக் அரெஸ்ட்) ஏற்பட்டு, அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. லோயாவுக்குப் பிறகு, பொறுப்பேற்ற நீதிபதி  எம்.பி.கோசவி, அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று (9.2.2018) சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாதக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 114 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட கோரிக்கைக் கடிதத்தினை குடியரசுத் தலைவரிடம் அவர்கள் அளித்தனர். சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!