வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (10/02/2018)

கடைசி தொடர்பு:21:30 (10/02/2018)

'வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் ரத்து!' - நிர்மலா சீதாராமன் கோரிக்கை

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மூன்றாவது முறையாக மாற்றியமைக்கப்பட்ட பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுக்கொண்டார். இந்திரா காந்திக்குப் பிறகு, பாதுகாப்புத்துறையை அலங்கரிக்கும் இரண்டாவது பெண் அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் இதன்மூலம் பெற்றார். இவர் பதவியேற்றது முதல், ராணுவத்தின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்திவருகிறார். குறிப்பாக லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ராணுவ வீரர்களைச் சந்திப்பதும், சுகோய் போர் விமானங்களில் பயணம் செய்வதும் எனப் பரப்பாக சுற்றிக்கொண்டிருக்கிறார் நிர்மலா. 

இந்தநிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிர்மலா சீதாராமனின் இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் எனத் தெரிகிறது. பதவியேற்புக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்ப நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவித்ததுபோல் தற்போது இந்தக் கோரிக்கையை நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க