வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (11/02/2018)

கடைசி தொடர்பு:11:35 (11/02/2018)

'முதல்வரின் தனிச் செயலாளர் வீடு மீது தாக்குதல்' பாஜகவினர் கைது!

ஒடிஷாவில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியான இவர் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணி புரிந்து வருகிறார். ஒடிஷா மாநிலத்தில் அதிகாரமிக்க ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். இந்தநிலையில் கார்த்திகேயன், ஆளும் பிஜு ஜனதா தளத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக பாஜகவினர் சமீபகாலமாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, நேற்று அவருடைய வீட்டை பாஜகவின் இளைஞர் அமைப்பான 'யுவ மோர்ச்சா' அமைப்பினர் முற்றுகையிட்டனர். கொடிகளுடன் சென்ற 30 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் அவரின் வீட்டை  முற்றுகையிட்டனர். மேலும் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த காவலர்களை தாக்கிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தனர். 

தொடர்ந்த அங்கிருந்த வாகனங்கள், பூந்தொட்டிகளை உடைத்த அவர்கள், சாணத்தை வீட்டின் மீது வீசியும் தாக்குதல் நடத்தினர். பாதுகாவலர்களால் போராட்டக்காரர்களை தடுக்க முடியவில்லை. தாக்குதல் நடந்தபோது கார்த்திகேயன் வீட்டில் இல்லை. இருப்பினும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் தாக்குதலின் போது வீட்டில் இருந்துள்ளனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த 4 பேரை ஒடிஷா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிஷாவில் அரசியல்வாதிகள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் அடிக்கடி நடத்தப்படும். ஆனால் அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறையாகும். கார்த்திகேயன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க