வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (11/02/2018)

ஜெயலலிதா உருவப் படம் திறப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்! - ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் திறப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நாளை (12.2.2018) நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊழல் வழக்கில் குற்றவாளி என  தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பது தவறான முன்னுதாரணம் என்று தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், ஜெயலலிதா படத் திறப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில தலைவர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க முதல்வர்களின் படங்கள் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது அறிவிப்பு வெளியிட்டு 2 நாள்களில் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றில் முதலமைச்சராக இருக்கும்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, உச்சநீதிமன்றமே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இயற்கை எய்திய காரணத்தால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படவில்லை. இவ்வாறு, ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு சட்டப்பேரவை வளாகத்தில் படம் திறப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்றார் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க