’எக்ஸாம் வாரியர்ஸ்’ அனிதாவுக்கு பிரதமர் மோடி தரும் டிப்ஸ் என்ன? #ExamWarriors

மோடி, modi

இந்தியப் பிரதமர் மோடி, தான் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகத்தில், பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை எழுதுவதற்காக 25 மந்திரங்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி, அவற்றைத் தனித்தனிப் பகுதிகளாகப் பட்டியலிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. 

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து இந்தப் புத்தகத்தை அளித்ததோடு, தமிழக மாணவர்களுக்கு அதனை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

‘மாணவர்கள் தேர்வுகளைப் பண்டிகளைப்போல கருதி, கொண்டாட வேண்டும்!’ எனத் தொடங்கும் இந்தப் புத்தகம் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மாணவர்களுக்காகப் பேசியவற்றைத் தொகுத்தும் வெளியிடப்பட்டுள்ளது. பல வண்ணங்களில், மாணவர்களைக் கவருமாறு வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மோடி எழுதியதாகத் தனித்தனிக் கடிதங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக யோகா பயிற்சிகள் படங்களோடு விளக்கப்பட்டிருக்கின்றன.

’எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம் வெளியாகியிருக்கும் இதே வேளையில்தான், தமிழகமே எதிர்த்த நீட் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்காக மோடி கூறியுள்ள வழிமுறைகள் அனைத்தையும் அவர் சொல்வதற்கு முன்பே நிச்சயமாக அரியலூர் மாணவி அனிதா பின்பற்றியிருப்பாள். மோடி தேர்வுகளைப் போராகவும், மாணவர்களைப் போர்வீரர்களாகவும் உருவகப்படுத்தியுள்ளார். அனிதா பல்வேறு தடைகளைத் தாண்டி, தேர்வு என்ற போரில் பெற்ற மதிப்பெண்கள் 1176. ஆனாலும், அவரால் மருத்துவர் ஆக முடியவில்லை என்றால், இங்கு பிரச்னை தேர்வுகள் அல்ல என்பதை பிரதமர் உணர வேண்டும். 

அனிதா, anitha

’இந்தியாவில் தேர்வு முறை ஒழிய வேண்டும். தேர்வுகள் மதிப்பெண்களை மட்டுமே மையப்படுத்துகின்றன; அறிவு வளர்ச்சியில் பங்காற்றுவதில்லை’ என நாடு முழுவதும் கல்வியாளர்கள் குரல்கொடுத்து வரும் சூழலில் இந்தப் புத்தகம் வெளிவந்திருப்பது மாணவர்கள் மீதான அக்கறையின் காரணமாகவா, இல்லை அரசியல் காரணங்களுக்காகவா என்று சந்தேகம் எழுகிறது. நூலாசிரியர் பற்றிய குறிப்பில், ‘நரேந்திர மோடி பெருவாரியான வாக்குகளைப் பெற்று, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த தலைவர் எனும் பெருமையைப் பெற்றார். அவரது வரலாறு காணாத வெற்றிக்கு இந்தியாவின் இளைஞர்கள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் தந்த ஆதரவே காரணம்’ எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தலுக்காக இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காகவே இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இதைப்பற்றி விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணிபுரிந்த பேராசிரியர் கருணானந்தம் அவர்களிடம் பேசிய போது, ‘நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் கல்வித்துறையின் வல்லுநர் அல்ல. தேர்வுகளை மாணவர்கள் வெல்வதற்காக டிப்ஸ் கொடுப்பது டுட்டோரியல் கல்லூரி முதல்வரின் வேலை; அந்த வேலையை செய்வதற்கு நாட்டின் பிரதமர் அவசியம் இல்லை. மேலும், தேர்வு முறை என்பதே குழந்தைகளுக்கு எதிரானது.

பேராசிரியர், professor

அவர்களுக்குள் போட்டியைத் தூண்டி, சக மாணவர்களையே எதிரிகளாகச் சித்திரிப்பது. தேர்வு முறை மாணவர்களின் நினைவாற்றலைத் தவிர வேறு எதையும் சோதிப்பது இல்லை. அது மாணவர்களை மட்டுமே மையப்படுத்தியதாக இருக்கின்றது. எனவே, மாணவர்களையும் ஆசிரியரையும் உள்ளடக்கிய மதிப்பீட்டு முறைக்கு இந்தியக் கல்வித்துறை மாற வேண்டும். அதனை நோக்கியே மோடியின் பணிகள் அமைய வேண்டும்’ என்றார். 

இந்தியாவில் சிறந்த கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு, அவற்றை அடைய வேண்டுமானால், மாணவர்கள் அதிகமான மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்தியப் பிரதமரின் கவலை மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதைப் பற்றி இல்லாமல், சிறந்த கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இருக்க வேண்டும். ’எக்ஸாம் வாரியர்’ ஆக இருந்தும் அனிதா மருத்துவராக முடியாமல் போனதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசின் இத்தகைய கல்விக் கொள்கை மட்டுமே காரணம்.

மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகத்தின் விலை 100 ரூபாய். இந்த ஆண்டுக்கான நீட் நுழைத்தேர்வுக்கான கட்டணம் 1,400 ரூபாய். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!