Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீதிபதி, போலீஸ், மேயர்... 'முதல்' தடம் பதித்த திருநங்கைகள்! #Transgender

திருநங்கை

'பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு' என்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம்மையும் அறியாமல் ஒதுங்கிச் செல்கிறோம். நம் வாழ்க்கையைப் போன்று அவர்களின் வாழ்க்கைப் பயணம், நாற்கர சாலையைப்போல இருப்பதில்லை. வெறுப்பு, அவமானம், தீண்டாமை, ஆதரவில்லாமை என்று இந்தச் சமூகம் இவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் குண்டும் குழியுமான, இருட்டு சாலைகள். ஆனாலும், அந்த இருளையும் கிழித்துக்கொண்டு வெளிச்சத்துக்கு வருகிறார்கள். இன்று சமூகத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமைகளாகத் தங்களை நிலைநிறுத்தி வருகிறார்கள். இந்திய ஆட்சித்துறை, கலைத்துறை, தொழில்துறை, கல்வித்துறை, சினிமா என இவர்களின் தடம் பதியாத இடமே இல்லை. அவர்கள்தான் திருநங்கைகள் எனச் சொல்லப்படும் ஆளுமைகள். தங்களது வெற்றியின் மூலம், சமூகத்தின் பார்வைக்கு விடை சொல்லியதோடு, பலரின் நம்பிக்கை வாழ்வுக்கான விதையை விதைப்பவர்கள். அப்படிப்பட்ட ஆளுமைகளில் சிலர்... 

தாரிகா பானு

தாரிகா பானு

தூத்துக்குடி மாவட்டம், நிலக்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவர் தாரிகா பானு. திருநங்கை என்னும் அடையாளத்துடனே பள்ளிப் படிப்பை முடித்த முதல் நபர். ஒரு கட்டத்தில், வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். தாரிகா பானுவை சென்னை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. பெரும் போராட்டங்களைச் சந்தித்த பிறகே சென்னை பள்ளி ஒன்றில் அனுமதி கிடைத்தது. அதற்கும் அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட திருநங்கை என்னும் சான்றிதழை அடையாளமாகக் காட்டவேண்டி இருந்தது. இப்போது, சித்த மருத்துவத் துறையின் முதல் திருநங்கை மருத்துவராகக் கால்பதித்துள்ளார். வாழ்த்துக்கள் தாரிகா பானு. 

பிரித்திகா

பிரித்திகா யாஷினி: 

முதல் திருநங்கை உதவி ஆய்வாளர். இந்த வார்த்தைகள் இன்று மிக எளிமையாக இருக்கலாம். இவரைத் தொடர்ந்து பல திருநங்கைகள் இந்தியக் காவல் துறையில் இணைந்திருக்கலாம். ஆனால், இதற்காக அவர் ஏறி இறங்கிய நீதிமன்றப் படிகள் ஒவ்வொன்றும் அவரின் போராட்டத்தைச் சுமந்துள்ளன. எழுத்துத் தேர்வுக்காக அனுப்பிய விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டது. போராடி தேர்வு எழுதியவருக்கு, உடற்தகுதி தேர்விலும் பாகுபாடு காட்டப்பட்டது. அதில் தேர்ச்சிபெற்றும் வேலை நிராகரிக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் இவர் நீதிமன்ற கதவை தட்டினார். இவை எல்லாவற்றுக்கும் முன்வைக்கப்பட்ட ஒரே காரணம், இவர் ஒரு திருநங்கை என்பதுதான். சேலத்தில் ஒரு சாதாரண டிரைவரின் மகனாக, பிரதீப் குமாராக வளர்ந்தவர். இன்று, சூளைமேட்டில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர். பல திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாகக் கம்பீர நடைபோடுகிறார் பிரித்திகா யாஷினி. 

கிரேஸ் பானு

கிரேஸ் பானு: 

வருடந்தோறும் லட்சக்கணக்கில் பொறியியல் மாணவர்களை இந்தியா உருவாக்கித் தள்ளுகிறது. ஆனால், திருநங்கைகள் சமூகத்திலிருந்து முதல் பொறியியல் பட்டதாரியாக வெளிவந்தவர், கிரேஸ் பானு. இன்று பல திருநங்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்து தோள்கொடுத்து வருகிறார். தாரிகா பானு சென்னைக்கு வந்தபோது அவருக்கு பலம் சேர்த்தவர் கிரேஸ் பானு. இவரைத் தொடர்ந்து. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பொறியியல் துறையில் கால்பதித்து இருக்கிறார்கள். பல திருநங்கைகள் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டை நோக்கித் தன் தொடர் போராட்டக் களத்தில் இருக்கிறார். 

நர்த்தகி நடராஜ்

நர்த்தகி நடராஜ்: 

தமிழகத்தின் முதல் மதிப்புறு முனைவர் என்னும் பெருமைக்கு உரியவர், நர்த்தகி நடராஜ். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருநங்கை என்ற அடையாளம், இவரின் கலை ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையாக நின்றது. அதையெல்லாம் உடைத்து, தனது குருவான தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையிடம் நாட்டியத்தைப் பயின்றார். அந்த நாட்டியம் மூலமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசப்பட்டு வருகிறார். 'வள்ளி அம்பலம்' என்ற நாட்டியப் பள்ளியையும் நடத்திவருகிறார். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தனது கிளையை நிறுவி, வானமே எல்லை என வலம்வருகிறார். இவரின் நாட்டியப் பயணம், கலைமாமணி விருதையும், சங்கீத நாடக அகாடமியின் குடியரசுத் தலைவர் விருதையும் பெற்று தந்துள்ளது. 

லக்‌ஷ்மி நாராயணன்

லக்ஷ்மி நாராயணன் திரிபாதி: 

திருநங்கைகளின் குரலை ஐக்கிய நாடுகள் சபையில் ஒலிக்கச் செய்த பெருமை, லக்ஷ்மி நாராயண திரிபாதியையே சேரும். மும்பையைப் பூர்வீகமாகக்கொண்டவர். ஐக்கிய நாடுகள் சபையில், ஆசிய பசிபிக் பகுதியின் சார்பாக, 2௦௦8-ம் ஆண்டு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திப் படங்களில் நடிப்பவர், சமுகப் போராளி, சிறந்த பரதநாட்டியக் கலைஞர் எனப் பன்முகம் உடையவர், லஷ்மி நாராயணன் திரிபாதி. 

மது கின்னார்

மது கின்னார்: 

சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிட்ட மது கின்னார், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை மேயர். சத்தீஷ்கர் மாநிலத்தின் ராய்கரில் நகரமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை 4537 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

ஜோயிதா

ஜோயிதா மோண்டல்: 

பிரித்திகா யாஷினி நீதி கேட்டு நீதிமன்றம் சென்றார். ஆனால், நீதி வழங்கும் நீதிபதியாக உயர்ந்தவர் ஜோயிதா மோண்டல். கொல்கத்தாவில் பிறந்தவர். மேற்குவங்க மாநிலத்தில் லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சிறந்த சமுக சேவை செய்துவருவோருக்கு, லோக் அதாலாக் நீதிபதி ஆகும் உரிமை உண்டு. இதன் அடிப்படையிலே இவருக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி என்னும் பெருமையுடன் நீதி வழங்கிவருகிறார், ஜோயிதா மோண்டல். 

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா பிரதான்: 

ஐஸ்வர்யா பிரதான், இந்தியாவின் முதல் ஆட்சி அலுவலர். இவர் அப்பாவும் அரசு அதிகாரியே. ஆனாலும், ஒடிசாவைப் பூர்வீகமாகக்கொண்ட இவரின் இளமைப் பருவம் எளிதாக அமையவில்லை. திருநங்கை என்பதால், கல்லூரிப் பருவத்தில் சந்தித்த பாலியல் சீண்டல்களுக்கு அளவில்லை. தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டார். அதன் பலனாக, ஒடிசா மாநிலத்தின் நிதித்துறை, இவரை முதல் திருநங்கை வணிக வரித்துறை அதிகாரியாக நியமித்துள்ளது. 

பத்மினி பிரகாஷ்

பத்மினி பிரகாஷ்: 

இந்தியாவின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர், பத்மினி பிரகாஷ். இவரின் அடையாளத்தை இதோடு நிறுத்திவிட முடியாது. பரதநாட்டிய கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர், திருநங்கை சமூகத்தின் மிஸ் இந்தியா மற்றும் தமிழகத்தின் மிஸ் கூவாகம் என்ற பல பரிணாமங்கள் உண்டு. கோயம்புத்தூரில் பிறந்தவர். தன்னுடன் படித்த பிரகாஷ் என்பவரை கரம்பிடித்துள்ளார். ஸ்ரீதர் என்னும் ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 

இந்தச் சாதனையாளர்கள் எல்லாம் இந்தியாவின் மொத்தத் திருநங்கைகளில் மிகச் சொற்பமானவர்களே. 2௦11-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 4.8 லட்சம் திருநங்கைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம்கூட இல்லை. ஆனால், இவர்களுக்கான அடிப்படை உரிமைகளை, நடைமுறை வாழ்க்கைக்கான தேவைகளைக்கூட கொடுக்க வழியின்றி அரசு புறக்கணித்து வருகிறது. இவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் நிலை மாறவேண்டும். பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது தவறு என்று உணரப்போகும் நாள் என்றோ? 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement