வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (13/02/2018)

கடைசி தொடர்பு:16:59 (13/02/2018)

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் என்று தணியும் பதற்றம்?

ஜம்மு

ம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மனதில் கொள்ளாமல், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட மறுநாள், பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அம்மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு, ரஜோரி மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்திருப்பதைக் காஷ்மீர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். எல்லைப்பகுதிக்கு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இத்தாக்குதலின்போது பர்வீர் அக்தர் என்ற பெண், குண்டுபட்டுக் காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலை பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பூஞ்ச் பகுதியில் ஞாயிறன்று காலை மார்ட்டர் குண்டுவீச்சுத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். சர்வதேச எல்லையில் உள்ள இந்திய எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை பாதுகாப்புப் படையினர் 10 பேர் உள்பட 19 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் ஜம்முவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களாகும்.  

இதனிடையே எல்லைப்பகுதியான ஷோபியான் என்ற இடத்தில் ஜனவரி மாதம் 24-ம் தேதியன்று நிகழ்ந்த மோதலில் குண்டினால் காயம் அடைந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாய்குன்ட் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் அந்தச் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் சிறுவன் ஒருவனும், மூன்று தீவிரவாதிகளும் ஏற்கெனவே கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் படையினர் தாக்கியதில் பெண் உயிரிழந்தது மற்றும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது போன்ற சம்பவங்களால், ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரப் பகுதி கிராமங்களில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.

இரு தினங்களுக்கு முன் இந்திய ராணுவ முகாம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, முகாமின் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் மூன்று பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், இந்திய ராணுவத்தரப்பில் அதிகாரி உள்பட மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். ராணுவ வீரரின் தந்தையும் இத்தாக்குலில் கொல்லப்பட்டார்.இவர்களையும் சேர்ந்து சனிக்கிழமையன்று 6 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளே காரணம் என்று தெரியவந்துள்ளது.

ராணுவத்தினரின் பதிலடியைத் தொடந்து, ஜம்மு பகுதிக்கு நேரில் சென்ற ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அங்கு பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு மேற்கொண்டார். எந்தவொரு சவாலையும் முறியடிக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் இந்திய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்முவில் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், "இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட 5 ராணுவத்தினரும் பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். அனைவருமே ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்" என்றார்.

"அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் தீவிரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது" என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தீவிரவாதிகள் தரப்பில் மூன்றுபேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மூவரும் இந்திய ராணுவத்தினர் போன்று உடையணிந்திருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். தீவிரவாதிகளிடம் இருந்த ஏ.கே. ரக துப்பாக்கிகள், கையெறிகுண்டுவீச்சுக்குப் பயன்படுத்தப்படும் கருவி, வெடிமருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.  

இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2013-ல் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவுதினம் கடந்த வெள்ளிக்கிழமை என்பதால், எல்லைப்பகுதி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தீவிரவாதிகள் ஒருநாள் கழித்து, ஜம்மு ராணுவ முகாமில் உள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் சற்றே குறைந்திருந்த நிலையில், அண்மைக்காலமாக அதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வது, எல்லைப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்திய ராணுவத்தினரும் தொடர் பதிலடி கொடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால், அவ்வப்போது வெடிகுண்டுச் சத்தம் கேட்டு வருகிறது. இதனால், எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், இதுபோன்ற தீவிரவாதிகளின் தாக்குதல், எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாகக் கூறுகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள். இதனால், இரவு நேரம் உள்பட எந்நேரமும் அச்சத்துடனேயே வாழ்க்கை நடத்தவேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் என்று தணியும் எல்லைப்பகுதி பதற்றம்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்