வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (14/02/2018)

கடைசி தொடர்பு:08:30 (14/02/2018)

பாரீஸ் லக்‌ஷ்மியின் கடல் கடந்த `கதகளி'க் காதல்!

21 வயதுடைய சுனில், கிருஷ்ணர் வேடம் தரித்துக்கொண்டு கொச்சியில் கதகளி ஆடிக்கொண்டிருந்தார். பிரான்ஸைச் சேர்ந்த ஏழு வயது நிரம்பிய மரியம் ஷோஃபியா லக்‌ஷ்மி, பெற்றோருடன்  நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார். சுனிலின் கதகளி வேடமும் ஆடியவிதமும் மரியத்தின் மனதுக்குள் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. மரியத்தின் பெற்றோருக்கு இந்தியக் கலாசாரத்தின் மீது தனி ப்ரியம் உண்டு. அதனால், மரியத்தின் பெயருக்குப் பின்னால் `லக்‌ஷ்மி' என்ற இந்தியப் பெயரும் ஒட்டிக்கொண்டிருந்தது. மரியம் சகோதரரின் பெயருக்குப் பின்னால் `நாராயணன்' இணைந்திருந்தது. மரியத்தின் குடும்பத்துக்கு, கதகளியும் சுனிலும் பிடித்துப்போக குடும்ப நண்பர்களாகிவிட்டனர். 

கதகளி நடனக் கலைஞர் சுனில்15 வயதில், லக்‌ஷ்மி மீண்டும் ஒருமுறை இந்தியா வந்தார். பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது லக்‌ஷ்மியின் ஆசை. சுனிலின் கதகளி நடனம் கண்ணுக்குள்ளேயே நிற்க, மீண்டும் அவரைச் சந்தித்தார். இருவருமே ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டிருந்தனர்.

``ஒரு கலைஞராகத்தான் அவரை நான் காதலிக்கத் தொடங்கினேன். பழகப் பழக மிகச் சிறந்த மனிதரிடம் காதல் வயப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்'' என்று தன் கணவர் பற்றி சிலாகிக்கிறார் லக்‌ஷ்மி.

சுனிலோ, ``ஏழு வயதிலேயே எனக்கு அவள் அறிமுகமாகியிருந்தாலும், இந்தியக் கலாசாரத்தின் மீது லக்‌ஷ்மி வைத்திருந்த பற்றுதான் என்னை அவள் பக்கம் ஈர்த்தது. இருவருக்கும் 14 வயது வித்தியாசம். அதெல்லாம் எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை'' என்றார்.

எல்லா காதல்களும் சுலபத்தில் வெற்றி பெறுவதில்லை. சுனில்-லக்‌ஷ்மி காதலும் அப்படித்தான்.  வில்லன்கள் வரத்தானே செய்வார்கள்! சுனிலின் குடும்பத்தினர் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இனம், மதம், மொழி என ஒவ்வொன்றிலும் வேறுபாடு. மேற்கத்தியக் கலாசாரம் சுனிலின் பெற்றோருக்கு அச்சத்தைத் தந்தது. சுனிலுக்காக, லக்‌ஷ்மி மலையாளம்கூட கற்றுக்கொண்டார்; சேலை அணியப் பழகினார்; பரதநாட்டியத்தை மிக வேகமாகக் கற்கத் தொடங்கினார். ஒருநாள், லக்‌ஷ்மி ஆடிய நடனத்தைப் பார்த்து மெய்சிலிர்த்த சுனிலின் பெற்றோர், லக்‌ஷ்மியை மருமகளாக ஏற்றுக்கொண்டனர். இப்போது, லக்‌ஷ்மி கேரளாவின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர். ஒருசில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். கணவரும் மனைவியும் இணைந்து  வைக்கத்தில் உள்ள தங்கள் வீட்டில் `கலாசக்தி' என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்துகிறார்கள். லக்‌ஷ்மியிடம் நடனம் கற்றுக்கொள்வதற்கு, குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

கதகளி காதல்

``இருவருமே கலைத் துறையைச் சேர்ந்தவர்கள். நடனம்தான் எங்களை இணைத்தது. கதகளிக்கும் பரதநாட்டியதுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. நடனம் மட்டுமே எங்களின் மொழி, இலக்கு, லட்சியம் எல்லாம். அதனாலேயே வாழ்க்கைப் பயணத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. என்ன... அவர் சின்ன விஷயத்துக்கெல்லாம் `ஹர்ட்' ஆகிவிடுவார். சிறுபிள்ளைத்தனமாகக் கோபப்படுவார். அந்தச் சிறுபிள்ளைத்தனமும் எனக்குப் பிடித்திருந்தது. சிறுவயதிலிருந்தே அவரோட குடும்பத்தைக் கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொண்டார் என்பது எனக்குத் தெரியும்.

கதகளி காதல்

திருமணம் மட்டுமே வாழ்க்கையில் லட்சியம் அல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியங்கள் இருக்க வேண்டும். காதலில் விழுவதும் விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்வதைத் தாண்டி மற்றோர் வாழ்க்கையும் உள்ளது. லட்சியத்தை நோக்கிச் செல்லும் நேரத்தில்கூட காதல் அதுவாக நிகழும். திருமணத்துக்குப் பிறகு, சமுதாயத்துக்கு எங்களால் முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும். நாம் மறைந்த பிறகும் நம் பெயரைச் சொல்லும் வகையில் இந்த உலகத்தில் ஏதாவது ஒன்று இருந்தால்தான், நாம் காதலிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றதாகக் கருத முடியும்'' என  `காதல்' என்ற வார்த்தையில் ஒளிந்திருந்த வாழ்க்கைத் தத்துவத்தை வெளிப்படுத்தினார் லக்‌ஷ்மி!

கதகளி காதல்

pic : facebook

கதகளியையும் பரதநாட்டியத்தையும் கலந்து புதிய வடிவிலான நடனத்தை உருவாக்குவதே சுனில் - லக்‌ஷ்மி தம்பதியின் லட்சியம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க