`ரூ.11,000 கோடிக்கு மோசடி பணப் பரிவர்த்தனை' - அதிரவைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ரூ.11,000 கோடி அளவுக்கு மோசடி பணப் பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகும். இதன் கிளைகள் நாடுமுழுவதும் உள்ளன. இந்தநிலையில், இந்த வங்கியின் மும்பை கிளை ஒன்று மோசடி பணப் பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி தெரிவித்துள்ளதாவது, "மோசடியான முறையில் மும்பை கிளையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. மோசடி குறித்து செபி அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என வங்கி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. 

மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மோசடி பணப்பரிவர்த்தனை மூலம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் பயனடைந்துள்ளனர். இதேபோல் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் முன்கூட்டியே பணிப்பரிவர்த்தனை செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி தகவல் வெளியானதால் பங்குச் சந்தையில் பஞ்சாப் வங்கியின் பங்குகள் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக இதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவர் குடும்பத்தார் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!