வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படிக்கவும் `நீட்’ அவசியமா?

வெளிநாடுகளில் மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களும் ‘நீட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது, கட்டாயமாக்குவது பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. 

neet

சீனா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் இளநிலை எம்.பி.பி.எஸ் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டு எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத்தேர்வான - ’நீட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற திட்ட வரைவை, மருத்துவ கவுன்சில் ஆஃப் இந்தியா (எம்.சி.ஐ.,) தயாரித்துள்ளது. 

நாடு முழுவதும் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 68,000 மாணவர் இடங்களுக்கு, சுமார் 12 லட்சம் மாணவர்கள் ’நீட்’ தேர்வின் மூலம் போட்டியிடுகின்றனர். இதில், 6 லட்சம் மாணவர்கள் மட்டுமே ’நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ் இடங்கள் போக, மீதமுள்ள பல் மருத்துவம், ஆயுர்வேத, சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பை பல மாணவர்கள் மேற்கொள்கின்றனர். மேலும், சுமார் 4 லட்சம் மாணவர்கள் மற்ற துறைகளைத் தேர்வு செய்து படிக்கின்றனர். சராசரியாக, இரண்டு முதல் மூன்று ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். 

வெளிநாட்டில் மருத்துவப் பட்டப்படிப்பை படித்து முடிக்கும் மாணவர்களின் திறன்களை மதிப்பிட ’ஸ்கிரீனிங் டெஸ்ட்’ எனும் தகுதித் தேர்வை எம்.சி.ஐ நடத்துகிறது. இத்தேர்வில் பங்கேற்கும் பல மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாக, சுகாதார அமைச்சகத்தின் கூட்டுறவுச் செயலர் அருண் சிங்கால், தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் கூறுகையில், மேல்நிலை பொதுத்தேர்வில் 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இன்றைய கல்வி சூழலில் 50 சதவிகித தேர்ச்சி மதிப்பெண் என்பது மிகவும் எளிது. மாணவர்களின் கல்வி தரம் பற்றின விவாதங்கள் நாளொன்றுக்கும் நடைபெற்று வருவதால், எம்.சி.ஐ, இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டுக்குப் படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் தரத்தை உறுதி செய்ய முடியும்' என்றார். 

-சுகன்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!