பணத்துக்காகச் சிறுவனைக் கொன்று சூட்கேஸில் அடைத்த கொடூரம்! வாலிபரை சிக்கவைத்த `எலி'

யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் பயின்றுவரும் அவ்தேஷ் என்னும் இளைஞர், 7 வயது சிறுவனைக் கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

டெல்லி, ஸ்வரூப் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன் 7 வயது மகனைக் காணவில்லை என்று தந்தை கரண் சயினி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி மாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். காவல் நிலையத்துக்கு கரண் சயினி உடன் அவ்தேஷ் சக்யா என்ற 27 வயது இளைஞரும் சென்றிருந்தார். அவர் கரண் சயினியின் கீழ் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர். சிறுவன் காணாமல் போனது பற்றி போலீஸ் விசாரணையைத் தொடங்கியது.

Awadhesh Shakya
அவ்தேஷ்

கரண் வீட்டைச் சுற்றி வசித்து வந்த அனைவரையும் போலீஸ் விசாரித்தது. ஆனால், எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. விசாரணைக்காகக் கரண் வீட்டின் கீழ் வசித்து வந்த அவ்தேஷ் வீட்டுக்குப் போலீஸ் சென்றபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. ‘வீட்டுக்குள் எலித் தொல்லை அதிகம். எங்கேயோ எலி செத்துக்கிடக்கிறது’ என்று போலீஸிடம் தெரிவித்துள்ளார் அவ்தேஷ். போலீஸுக்கு அவர்மீது சந்தேகம் அதிகரித்தது. அவரைக் காவலில் எடுத்து துருவித் துருவி விசாரித்துள்ளனர். ஒருகட்டத்தில் உண்மையை மறைக்க முடியாமல் நடந்ததைச் சொல்லியிருக்கிறார் அவ்தேஷ்.

இந்தச் சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில் ``அவ்தேஷ் சக்யா கரணின் மகனுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். கரண் குடும்பத்துக்கு அவ்தேஷைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. சிறுவனுடன் அவ்தேஷ் விளையாடுவதைக் கரண் விரும்பவில்லை. கரணுக்கும் அவ்தேஷுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழிவாங்க வேண்டும் என்று அவ்தேஷ் நினைத்தார். மேலும், சிறுவனின் மீது பெற்றோர் மிகவும் பாசமாக இருந்ததால், அவர்களை மிரட்டி பணம் பறிக்கலாம் என்றும் அவ்தேஷ் எண்ணியுள்ளார். இதனால் சைக்கிள் வாங்கித் தருவதாக ஏமாற்றி சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவ்தேஷ். சிறுவனிடம் “உன் வீட்டில் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்” என்று அவ்தேஷ் கேட்டதற்கு `உங்கள் வீட்டுக்குப் போகக் கூடாது என்று அப்பா சொன்னார்' என்று சிறுவன் வெள்ளந்தியாகப் பதில் கூறியிருக்கிறான்.

கோபமடைந்த அவ்தேஷ், சிறுவனைக் கொன்று சூட்கேஸில் அடைத்துவைத்துள்ளார். தன் மெத்தையின் அடியில் சூட்கேஸை மறைத்து வைத்தார். துர்நாற்றம் வீசுவதாகப் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கேட்டதற்கு எலி செத்துக்கிடப்பதாகக் கூறியுள்ளார். அவர்களை நம்பவைக்க ஒன்றிரண்டு எலிகளைப் பிடித்து சாகடித்து வீட்டுக்குள் ஆங்காங்கே வைத்துள்ளார். காவல்துறைக்கு ஆரம்பத்தில் இவர்மீது சந்தேகம் வரவில்லை. சிறுவனின் பெற்றோருடன் இவரும் காவல்நிலையத்துக்கு வந்திருந்தார். மேலும், அவர் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வருவதாகக் கூறியதால் அவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. `செத்த எலி துர்நாற்றம்’ என்று அவர் உளறியது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் விசாரணையைத் துரிதப்படுத்தினோம். கடைசியில் சிக்கிக்கொண்டார்’' என்றனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!