வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (15/02/2018)

கடைசி தொடர்பு:20:30 (15/02/2018)

கேரளக் கொடூரம்..!- அடிவயிற்றில் மிதித்ததால் குழந்தையை இழந்த கர்ப்பிணி பெண்

கேரளாவில் நிலத்தகராறில் கர்ப்பிணி பெண்ணை அடிவயிற்றில் எட்டி உதைத்ததால் அவர் கருக்கலைப்பு செய்ய வேண்டிய கொடூர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Kerala


கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேலாம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா சிபி (வயது 28). இவருடைய கணவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜனவரி 28-ம் தேதி எல்லைத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தொடர்புடைய அந்தப் பகுதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் தம்பி உள்பட 6 பேர் ஜோஸ்னா சிபியின் கணவருடன் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றி இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கணவருக்கு ஆதரவாக ஜோஸ்னா சிபி பேசியுள்ளார். ஜோஸ்னா அப்போது 4 மாத கர்ப்பமாக இருந்தார்.

ஆத்திரமடைந்த தம்பி, ஜோஸ்னாவை கர்ப்பிணி என்றும் பாராமல் அடிவயிற்றில் எட்டி உதைத்துவிட்டார். இதில் அங்கேயே கருச்சிதைவாகி ஜோஸ்னாவுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. தம்பி உள்பட 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கேரளாவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அக்கட்சியின் பொறுப்பாளர் உள்ளிட்டவர்கள் நடத்திய இந்த வன்முறைத் தாக்குதல் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.