வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (15/02/2018)

கடைசி தொடர்பு:20:50 (15/02/2018)

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

உச்சநீதிமன்றம்

காவிரி நீரைப் பங்கீடு செய்வது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதோடு, மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் தமிழகம் வலியுறுத்தியது. 2007–ம் ஆண்டு வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த மனு மீது மீதான விசாரணை முடியும் வரை, தமிழகத்துக்குக் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கர்நாடகா செவி சாய்க்கவில்லை. 

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ம் தேதி முடிவடைந்தது. இதன்பின்னர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. காவிரி நீரைப் பெறுவதற்காக 25 ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தை தமிழக அரசு நடத்திவருகிறது. இந்தநிலையில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகள் அமிதவராய், கன்வில்கர் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இதன்மூலம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு 150 நாள்களுக்குப் பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாகும் தீர்ப்பில் இழுபறியில் இருக்கும் காவிரி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் காவிரி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க