வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (16/02/2018)

கடைசி தொடர்பு:12:14 (16/02/2018)

தென்னகத்தின் `ரிஷிகேஷ்' தேஜஸ்வனியில் போகலாம் ஒரு த்ரில் ரைட்! #RiverRafting

உங்களுக்கு பயமே இல்லையா... மலையில் இருந்து தரைக்கு வேகமாக ஓடிவரும் ஆற்றில் காற்று நிரப்பிய பலூன் படகில் மின்னலென செல்ல ஆசையா? இதற்காக ரிஷிகேஷ் எல்லாம் போக வேண்டாம். அருகில் உள்ள தேஜஸ்வனி நதியிலேயே உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம். குடகில் உற்பத்தியாகி, அரபிக்கடல் நோக்கி வரும் குட்டி நதிதான் தேஜஸ்வனி நதி. கேரளாவில் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஓடி, நல்லேஸ்வரத்தில் அரபிக்கடலில் சேர்கிறது. மொத்தம் 64 கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த நதியில், 20 கிலோமீட்டர் தொலைவுக்கு ராஃப்டிங்  செய்ய முடியும். இந்த த்ரில் பயணம் உங்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். தேஜஸ்வனி பற்றிப் படிப்பதற்கு முன், அட்வெஞ்சர்ஸ் சுற்றுலா பற்றித் தெரிந்துகொள்ளலாமா...

ராஃப்டிங்

வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த அட்வெஞ்சர்ஸ் டூர், இந்தியாவிலும் பெருகிவருகிறது.  2017-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 31 லட்சம் பேர் அட்வெஞ்சர்ஸ் டூர் சென்றுள்ளனர். ஒரு அட்வெஞ்சர் பேக்கேஜ் டூருக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். 2018-ம் ஆண்டை அட்வெஞ்சர்ஸ் டூர் ஆண்டாக அறிவித்துள்ளது மத்திய சுற்றுலா அமைச்சகம்.

மலையிலிருந்து தரையை நோக்கி ஓடிவரும் ஆற்றில் காற்று நிரப்பிய படகில் செல்வதை `Rafting' எனப்படுகிறது. மலையிலிருந்து தரையை நோக்கிக் காலில் கயிற்றைக் கட்டிக்கொண்டு குதிப்பதை `bungee jumping' எனப்படும். அந்தரத்தில் கம்பியில் சறுக்கிக்கொண்டு செல்லும் `Zip Lining', பாறையில் மேல் நோக்கி ஏறும் `climbing', பனிச்சறுக்கான `skiing', மலையை சைக்கிளிலேயே சுற்றும்  `mountain biking', ஆக்ஸிஜன் சிலிண்டர் மாட்டிக்கொண்டு கடலுக்குள் குதிக்கும் `scoupa diving' போன்றவை  அட்வெஞ்சர்ஸ் டூர் ரகத்தைச் சேர்ந்தவை. 

தமிழ்நாட்டில் அட்வெஞ்சர்ஸ் டூர் செல்லக்கூடிய இடங்கள் குறைவு. மாமல்லபுரத்தில் `wind surfing' என்கிற தண்ணீர் சறுக்கு செல்லலாம். நாம் கடலில் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டோம். அனுபவமில்லாதவர்கள் கடலில் இறங்கவும் கூடாது. கொஞ்சம் ரிஸ்க்குடன் த்ரில் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு `தேஜஸ்வனி நதி' ஒரு வரம். 90 சதவிகிதக் காற்றும், 10 சதவிகித நம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தாராளமாக ராஃப்டிங் செல்லலாம்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தேஜஸ்வனியில் ராஃப்டிங் செல்ல ஏற்ற சமயம். சரி, தேஜஸ்வனி நதியை அடைவது எப்படி? சென்னையிலிருந்து செல்பவர்கள் நேரடியாக கண்ணூர் சென்று அங்கிருந்து செர்புழா செல்ல வேண்டும். கண்ணூரிலிருந்து செர்புழாவுக்கு 1.45 மணி நேரம் பயணம். பேருந்து, கார் என வசதிக்கேற்ப போகலாம். ராஃப்டிங் செல்ல ஒரு குழுவுக்குக் குறைந்தது 5 பேர் அனுமதிக்கப்படுவர். 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. தலைக்கு 1,200 ரூபாய் கட்டணம். சுமார் 2 மணி நேரம் நதியில் ராஃப்டிங் செய்யலாம்.

ராஃப்டிங்

சிறிய குறுகலான நதியில் பாறைகளின் மேல் மிக வேகமாக ஓடும் தண்ணீரில் `எங்கே படகு கவிழ்ந்துவிடுமோ!' என்கிற பரபரப்புடன் செல்வது `அப்பப்பா... என்ன ஒரு த்ரில்லிங்! இந்த ஆற்றையொட்டி மாங்குரோவ் காடுகள் உள்ளன. நதியின் மேலே மரக்கிளைகள் ஆங்காங்கே குறுக்கே செல்லும். அதனால் கவனக்குறைவு கூடவே கூடாது. பாதுகாப்பு மிக அவசியம். எந்தச் சூழலிலும் லைஃப் ஜாக்கெட்டைக் கழற்றக் கூடாது. தலையில் ஹெல்மெட் இல்லாமல் படகில் ஏறவே வேண்டாம். பாறைகள் நிறைந்த இடத்தில் படகில் செல்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். குழுத் தலைவரின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும். பயம் கூடவே கூடாது. பயந்தால் உங்களுக்கு த்ரில்லிங் கிடைக்காது.

ஆற்றில் ஆங்காங்கே குளிப்பதற்கு அருமையான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் நீச்சல் தெரியாதவர்கள்கூட லைஃப் ஜாக்கெட் அணிந்து குளித்து மகிழலாம். தெளிந்த குளிர்ந்த நீரில் குளிப்பது, உங்களுக்கு அப்படியொரு மகிழ்வைத் தரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்