வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (16/02/2018)

கடைசி தொடர்பு:14:23 (16/02/2018)

மோடியுடன் கடைசி நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக்கொண்ட `மோசடி மன்னன்' நீரவ்!

ஞ்சாப் வங்கியில் மோசடி செய்த நீரவ் தலைமறைவாவாற்கு முன்,  பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில்தான் கடைசியாக பங்கேற்றுள்ளார்.

பிரதமர் மோடியுன் நீரவ் மோடி எடுத்த கடைசி புகைப்படம்.

இரண்டாவது வரிசையில் இடமிருந்து நான்காவதாக நீரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்ட விரோதப் பண பரிமாற்றம் வழியாக ரூ.11,360 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கீதாஞ்சலி ஜூவல்லரி உரிமையாளரும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி அவர் இந்தியாவிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். கடைசியாக ஜனவரி 23-ம் தேதி ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இதுதான் அவர் கடைசியாகப் பங்கேற்ற பொது நிகழ்ச்சி. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இந்திய தொழிலதிபர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறுகையில், ''கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி ஹரிபிரசாத் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் நீரவ் மோடி மற்றும் உறவினரும் கீதாஞ்சலி ஜூவல்லரி உரிமையாளருமான மெகுல் ஷோக்ஸி ஆகியோர் வங்கிப் பண பரிவர்த்தனை முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியிருந்தார். வழக்கம்போல் அரசும் அதிகாரிகளும் மெத்தனமாக இருந்துள்ளனர்'' என்று குற்றம்சாட்டியுள்ளது. 

ஹரிபிரசாத் மீடியாக்களிடம் கூறுகையில், ''என் புகாரில் நீரவ் மோடிமீது கவனம் செலுத்துமாறு கூறினேன். ஆனால், மெத்தனமாக இருந்த அரசு அவரை வெளிநாட்டுக்கு பறக்க வைத்துவிட்டது. பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், நிதித்துறை புலனாய்வு முகமை முறையான  நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பு தலைவர் சந்தீப் சர்ஜேவாலா, ''பிரதமர் மோடிக்கு நீரவ் பற்றி புகார் சென்றுள்ள நிலையிலும் டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் அவரைப் பங்கேற்க அனுமதித்தது ஏன். சுமார் 30,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக வங்கித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். நீரவ் மோடி, மெகுல் ஷோக்ஸி ஆகியோரைக் காப்பாற்ற முயல்வது யார்'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

நீரவ், இவரின் சகோதரர் நிஷால் ஜனவரி 1-ம் தேதி, மனைவி ஏமி ஜனவரி 6-ம் தேதி பங்குதாரர் மெகுல் ஷோக்ஸி ஜனவரி 4-ம் தேதி நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். தலைமறைவாக உள்ள நீரவ் மோடி நியூயார்க் நகரில் உள்ள எஸ்ஸக்ஸ் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை வரை மனைவி ஆமி மோடியுடன் தங்கியிருந்துள்ளார். வங்கி முறைகேடு தகவல் வெளியானதும் புதன்கிழமை இரவு கணவனும் மனைவியும் பரபரப்படைந்துள்ளனர். பின்னர், தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க